கார் எரிப்பு வழக்கில் 3 வாலிபர்கள் கைது


கார் எரிப்பு வழக்கில் 3 வாலிபர்கள் கைது
x

கார் எரிப்பு வழக்கில் 3 வாலிபர்கள் கைது

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை அருகே கார் எரிக்கப்பட்ட வழக்கில் 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கார் தீப்பிடித்து எரிந்தது

அய்யம்பேட்டை அருகே வடக்குமாங்குடி வெள்ளாள தெருவில் வசித்து வருபவர் அப்துல் மஜீத் (வயது 42). இவர் துபாயில் பணி புரிந்து வருகிறார். இவருடைய சகோதரர்கள் தாஜுதின், சுலைமான் பாட்சா. கடந்த பிப்ரவரி மாதம் அப்துல் மஜீத் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் அதே ஊரை சேர்ந்த ஷாஜகான் என்பவருக்கும், அப்துல் மஜீது குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்ததும், ஷாஜகான் காரை எரித்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஷாஜகான் கைது செய்யப்பட்டார். அதே கார் கடந்த 19-ந்தேதி நள்ளிரவு மீண்டும் தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. தகவலறிந்த அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காருக்கு யாராவது தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டார்களா? என விசாரணை நடத்தி வந்தனர்.

தனிப்படை அமைப்பு

இதுகுறித்து விசாரணை நடத்துவற்காக பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி மேற்பார்வையில் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா மற்றும் செல்போன் வைத்து எண்களை ஆய்வு செய்ததில் இந்த வழக்கின் பழைய குற்றவாளியான ஷாஜகான் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த சில வாலிபர்களுடன் செல்போனில் பேசியது தெரியவந்தது. இதையடுத்து ஷாஜகானுடன் செல்போனில் பேசிய செருமாக்கநல்லூர் மேட்டு தெருவை சேர்ந்த கவுதம் (20), அதே பகுதியை சேர்ந்த நவீன் பாலா (25), அம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருண்குமார் ( 22) ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர்.

3 பேர் கைது

விசாரணையில் ஷாஜகான் தூண்டுதலின் படி அப்துல் மஜித் காரை பெட்ரோல் ஊற்றி எரித்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் தலைமறைவான ஷாஜகானை வலைவீசி தேடி வருகின்றனர். கார் எரிப்பு சம்பவத்தில் 24 மணி நேரத்தில் துப்பு துலக்கிய போலீசார் மற்றும் தனிப்படையினரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.


Related Tags :
Next Story