3 கிராம எல்லையையொட்டி செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்
வடகாடு பகுதியில் 3 கிராம எல்லையை ஒட்டி செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எல்லை பகுதி
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு, கீழாத்தூர், கொத்தமங்கலம் ஆகிய 3 ஊர்களின் எல்லையோர பகுதிகளை இணைக்கும் சாலை நீண்ட காலமாகவே குறுகலான மண் சாலையாக அதுவும் சேதமடைந்த நிலையில் இருந்து வருகிறது. இச்சாலை வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆரம்பித்து கீழாத்தூர், வெள்ளாகுளம் செல்லும் வழியை தொட்டு பின்னர் கொத்தமங்கலம், சிதம்பரவிடுதி இணைப்பு சாலை வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நீண்டு செல்கிறது.
விவசாய விளை பொருட்கள்
இச்சாலையின் இருபுறமும் தென்னை, நெல், வாழை, அரவை கரும்பு, கடலை, கத்தரி, வெண்டை, மல்லிகை, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட எண்ணற்ற பயிர்களை விவசாயிகள் இப்பகுதிகளில் பயிரிட்டு பராமரித்து வருகின்றனர்.
இப்பகுதி விவசாயிகள் ஆண்டு தோறும் விவசாய விளை பொருட்கள் மற்றும் உரம், உழவு வாகனங்களை இச்சாலை வழியே கொண்டு செல்ல பெரும் சிரமப்பட வேண்டியதாக உள்ளது.
இப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் மழை காலங்களில் இந்த மண் சாலையில் செல்ல முடியாது.
பாதை துண்டிப்பு
மேலும் 24 மணி நேரமும் செயல்படும் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனைக்கு ஒரு அவசர உதவிக்கு கூட செல்ல பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 12 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு இங்கு வந்த காட்டாற்று மழை தண்ணீர் கூட இவ்வழியாக தான் அருகேயுள்ள மாங்குளம் அணைக்கட்டு மற்றும் அம்புலி ஆறுகள் வழியாக சென்று ஒன்று சேர்கின்றன. இதனால் இப்பகுதியில் உள்ள பாதை துண்டிக்கப்படுவதால் இப்பகுதி மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.
இச்சாலையை சீரமைக்க கோரி இப்பகுதி மக்கள் கூறியதாவது:-
தீர்வு காண வேண்டும்
வடகாடு பகுதியை சேர்ந்த முத்தையா:- இந்த மண் சாலையை சற்று தரம் உயர்த்தி தார்சாலையாக அமைத்து கொடுத்தால் விவசாய விளை பொருட்கள் கொண்டு செல்ல தங்களுக்கு ஏதுவாக இருக்கும். மழை நேரங்களில் மண் சாலை ஈரப்பதம் காரணமாக வழுவழுப்பாக இருப்பதால் பலரும் விவசாய விளை பொருட்களுடன் வழுக்கி விழுந்து காயத்துடன் சென்று வருவதாகவும், இதனை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் பார்வையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும்.
தங்கராசு:- இந்த மண் சாலையை தரம் உயர்த்தி தார்சாலையாக அமைத்து கொடுத்தால் கொத்தமங்களம், கீழாத்தூர் பகுதியை சேர்ந்த வெள்ளாகுளம் போன்ற பகுதிகளை சேர்ந்த எண்ணற்ற விவசாயிகள் மட்டுமின்றி அரசு முழு நேர மருத்துவமனைக்கு சிறந்த குறுக்கு வழி சாலையாகவும் இது அமையும்.
தார்சாலையாக மாற்ற வேண்டும்
அன்பரசன்:- இவ்வழியாக டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் போது எதிர்பாராத விதமாக எதிரில் வேறு ஏதாவது வாகனங்கள் வந்தால் கூட ஒதுங்க இடமில்லாத அளவிற்கு இவ்வழி இருப்பதாகவும், நெல் கதிர் அறுவடை செய்ய வாகனங்கள் கொண்டு வருவது என்பது ஒவ்வொரு ஆண்டும் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. இதனால் உடனடியாக இச்சாலையை தரம் உயர்த்தி தார்சாலையாக மாற்றம் செய்து தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.