பண்ணை இடிந்து விழுந்ததில் 3 ஆயிரம் கோழிகள் சாவு
அலங்காநல்லூரில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. பண்ணை இடிந்து ஓடுகள் சரிந்து விழுந்ததில் 3 ஆயிரம் கோழிகள் இறந்தன.
அலங்காநல்லூர்,
அலங்காநல்லூரில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. பண்ணை இடிந்து ஓடுகள் சரிந்து விழுந்ததில் 3 ஆயிரம் கோழிகள் இறந்தன.
சூறை காற்றுடன் மழை
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அது போல் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறை காற்றுடன் மழை பெய்தது.
குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக ஒரு சில இடங்களில் சாலையோரத்தில் இருந்த மரங்கள் கீழே விழுந்தன. மின்கம்பங்களும் சாய்ந்ததால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
3 ஆயிரம் கோழிகள் சாவு
அலங்காநல்லூர் அருகே செல்லகவுண்டம்பட்டி பகுதியில் உள்ள கோழிப்பண்ணையின் ஓடுகள் சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சரிந்து விழுந்தன. இதில் கோழிப்பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த ஏராளமான கோழிகள் ஓடுகள் விழுந்ததில் இறந்தன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்ததாக கோழிப்பண்ணை உரிமையாளர் தெரிவித்தார்.
இருப்பினும் சேத மதிப்பு குறித்து தீயணைப்பு துறையினர், வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள். இது குறித்து சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், வருவாய் துறையினரிடம் சேதமதிப்பை ஆராய்ந்து பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணை உரிமையாளருக்கு நிவாரணம் கிடைக்க உதவும்படி பரிந்துரை செய்து உள்ளார்.
மரங்கள் விழுந்தன
இதேபோல் சூறை காற்றுக்கு தாக்குப்பிடிக்காமல் அலங்காநல்லூர் பஸ் நிலையம் முன்பு 60 ஆண்டு பழமை வாய்ந்த வேப்பமரம் ஒன்று சாலையில் விழுந்தது. நல்லவேளை அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லவில்லை. மேலும் மழைக்கு சாலையோரத்தில் சில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.
இது குறித்து தகவல் அறிந்ததும் வாடிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் வெங்கடேஷ் பாபு, சாலை ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் பணியாளர்கள் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக சாய்ந்து கிடக்கும் மரங்களை எந்திரங்களின் உதவியுடன் அப்புறப்படுத்தினர்.
சோழவந்தான்
சோழவந்தான் சுற்றியுள்ள கிராமப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதில் இரும்பாடி ஊராட்சிக்குட்பட்ட சின்னஇரும்பாடி மெயின் ரோட்டில் 50 ஆண்டு பழமையான மரம் ஒடிந்து விழுந்தது. நல்லவேளை இரவு நேரத்தில் விழுந்ததால் அந்த வழியாக யாரும் செல்லவில்லை. இதை அறிந்த இரும்பாடி ஊராட்சிமன்ற தலைவர் ஈஸ்வரி பண்ணை செல்வம் மற்றும் ஊராட்சி பணியாளர்கள், கிராம மக்கள் ரோட்டின் குறுக்கே விழுந்திருந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்பின்னர் போக்குவரத்து சீரானது.