பேச்சிப்பாறை அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்


பேச்சிப்பாறை அணையில் இருந்து  3 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்
x

குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருவதால் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. திற்பரப்பு அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

குலசேகரம்:

குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருவதால் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. திற்பரப்பு அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மலையோர பகுதிகளில்...

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலையோர பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக அணையின் நீர்மட்டம் வெள்ள அபாய நிலையை தொட்டது. இதனை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் பேச்சிப்பாறையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

திற்பரப்பில் வெள்ளப்பெருக்கு

இந்தநிலையில் மழை மேலும் தீவிரமாகும் என வானிலை அறிவிப்புகள் தெரிவிக்கப்பட்டதால், பேச்சிப்பாறை அணையில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டது. இதனால், குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் சீறிப்பாய்கிறது.

திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று அங்கு வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் அருவியில் பாயும் வெள்ளத்தை பார்த்து ரசித்து விட்டு ஏமாற்றத்துடன் சென்றனர்.

மழை அளவு

அந்த வகையில் குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழை அளவில் அதிகபட்சமாக முள்ளங்கினாவிளை பகுதியில் 12.8 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது.

இதே போல பூதப்பாண்டி-1, கொட்டாரம்-2.2, மயிலாடி-3.2, நாகர்கோவில்-5.2, புத்தன்அணை-10.6, சுருளகோடு-6.4, தக்கலை-3, குளச்சல்-4.6, இரணியல்10.4, பாலமோர்-11.2, கோழிப்போர்விளை-4.2, அடையாமடை-3, குருந்தன்கோடு-6.4, ஆனைக்கிடங்கு-2 என்ற அளவில் மழை பெய்திருந்தது. மேலும் அணை பகுதிகளை பொறுத்த வரையில் பேச்சிப்பாறை-4.6, பெருஞ்சாணி-11.4, சிற்றார் 1-4.2, சிற்றார் 2-12.6, மாம்பழத்துறையாறு-3 மற்றும் முக்கடல்-2.7 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

அணை நிலவரம்

தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 1,470 கனஅடி தண்ணீர் வந்தது. இதே போல பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 922 கனஅடியும், சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 178 கனஅடியும், சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 40 கனஅடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.


Next Story