செயற்கை நிறம் கலந்து தயாரித்த 3¾ டன் குழல் அப்பளம் பறிமுதல்-உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை


செயற்கை நிறம் கலந்து தயாரித்த 3¾ டன் குழல் அப்பளம் பறிமுதல்-உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை
x

செயற்கை நிறம் கலந்து தயாரித்த 3¾ டன் குழல் அப்பளத்தை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

சேலம்

அதிகாரிகள் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் 35 குழல் அப்பளம் தயாரிப்பு நிறுவனங்கள் அனுமதி பெற்று செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சிவதாபுரம், கந்தம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள சில குழல் அப்பளம் தயாரிக்கும் நிறுவனங்களில் அதிகளவு செயற்கை நிறம் பயன்படுத்தப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

அதன்பேரில் நேற்று முன்தினம் மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவலிங்கம் மற்றும் அதிகாரிகள் குழல் அப்பளம் தயாரிக்கும் 4 நிறுவனங்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 2 நிறுவனங்களில் குழல் அப்பளத்தில் அதிகளவு செயற்கை நிறம் கலந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து மொத்தமாக 3 ஆயிரத்து 740 (3¾) டன்கிலோ குழல் அப்பளம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும். மேலும் மாதிரிக்காக குழல் அப்பளம் சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

எச்சரிக்கை

இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் கூறியதாவது:-

குழல் அப்பளத்தில் செயற்கை நிறம் சேர்க்க கூடாது என்று உணவு பாதுகாப்பு சட்டம் கூறுகிறது. பலமுறை இதுகுறித்து எச்சரிக்கை விடுத்தும் சில நிறுவனங்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆய்வின் போது குழல் அப்பளத்தில் அதிகளவு செயற்கை வண்ணப்பொடி கலந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த நிறுவன உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளோம்.

மேலும் ஆய்வறிக்கையின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குழல் அப்பள நிறுவனங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும். அப்போது செயற்கை நிறம் கலந்து குழல் அப்பளம் தயாரித்தாலோ? அவற்றை கடைகளில் வைத்து விற்றாலோ? அவைகள் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி வழக்கு தொடரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story