3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
பரமத்திவேலூரில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பரமத்திவேலூர்
பிளாஸ்டிக் பொருட்கள்
பரமத்திவேலூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பைகளை கடை உரிமையாளர் ஒருவர் விற்பனை செய்து வருவதாக நாமக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மணிவண்ணன் தலைமையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளர் சந்தானகிருஷ்ணன், வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வக்குமார் மற்றும் துப்புரவு ஆய்வாளர் குருசாமி ஆகியோர் பரமத்தி வேலூர் 4 ரோடு அருகே உள்ள வெங்கடசாமி (வயது 55) என்பவரது மளிகை கடையில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
3 டன் பிளாஸ்டிக் பறிமுதல்
இந்த சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் கவர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 3 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர் வெங்கடசாமிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் தொடர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.