3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவுக்கு கடத்தி செல்ல பதுக்கி வைக்கப்பட்ட 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

கேரளாவுக்கு கடத்தி செல்ல பதுக்கி வைக்கப்பட்ட 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் ரோந்து

பொள்ளாச்சி அருகே மண்ணூர் பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பாலக்காடு ரோடு மண்ணூர் பெருமாள் கோவில் தெருவில் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அப்போது மூட்டைக்குள் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டரான மணிகண்டன் (வயது 25) என்பவர் ரேஷன் அரிசி மூட்டைகளை அடுக்கி வைத்தது தெரியவந்தது.

பறிமுதல்

இதையடுத்து போலீசார் அவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில் மண்ணூர் பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் கேரளாவுக்கு கடத்துவதற்கு ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலா 50 கிலோ எடை கொண்ட 60 மூட்டைகளில் இருந்த 3 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story