நாமக்கல் வழியாக 3 ரெயில்கள் ஒரே ரெயிலாக இயக்கம்


நாமக்கல் வழியாக 3 ரெயில்கள் ஒரே ரெயிலாக இயக்கம்
x

சேலம்-மயிலாடுதுறை இடையே நாமக்கல் வழியாக 3 ரெயில்கள் ஒரே ரெயிலாக இயக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

நாமக்கல்

சேலம்-மயிலாடுதுறை

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை-திருச்சி, திருச்சி-கரூர், கரூர்-சேலம் ஆகிய 3 ரெயில்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரே ரெயில் சேவையாக சேலம்-மயிலாடுதுறை தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்க, ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து உள்ளது.

அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் நாமக்கல் வழியாக மயிலாடுதுறை-சேலம் முன்பதிவு இல்லா தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்குகிறது. மயிலாடுதுறை-சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில், மயிலாடுதுறையில் இருந்து தினமும் காலை 6.20 மணிக்கு புறப்பட்டு ஆடுதுறை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி, குளித்தலை, கரூர் வழியாக நாமக்கல்லுக்கு மதியம் 12.29 மணிக்கு வந்து சேரும். நாமக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து, 12.30 மணிக்கு புறப்பட்டு, ராசிபுரம் வழியாக சேலம் சென்றடையும்.

நாமக்கல் வழியாக...

மறுமார்க்மாக, சேலம்-மயிலாடுதுறை விரைவு ரெயில் சேலத்தில், மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு, நாமக்கல் ரெயில் நிலையத்திற்கு 2.54 மணிக்கு வந்து சேரும். நாமக்கல்லில் இருந்து 2.55 மணிக்கு புறப்பட்டு, மோகனூர், கரூர், குளித்தலை, திருச்சி, பூதலூர், தஞ்சை, ஆலங்குடி, பாபநாசம், கும்பகோணம், ஆடுதுறை வழியாக மயிலாடுதுறை சென்றடையும்.

இந்த ரெயில், இரு மார்க்கங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர், நாமக்கல், களங்காணி, ராசிபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதன் மூலம் நாமக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து இனி நேரடியாக ரெயில் மூலம் திருச்சி, தஞ்சை, ஆலங்குடி, பாபநாசம், சுவாமிமலை, தாராசுரம், கும்பகோணம், திருவிடைமருதூர், ஆடுதுறை, மயிலாடுதுறை போன்ற பகுதிகளுக்கும், அங்கு உள்ள முக்கிய ஆன்மிக தலங்களுக்கும், பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் எளிதாக சென்று வரலாம் நாமக்கல் மாவட்ட ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.


Next Story