3 வேன், 2 ஆட்டோ, 1 கார் பறிமுதல்
வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில் 3 வேன், 2 ஆட்டோ, 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.1 ¼ லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சாலை விதிகளை பின்பற்றாமலும், தகுதிச் சான்று பெறாமலும் இயக்கப்படும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவின் பேரில், வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் அறிவுறுத்தலின்படி மயிலாடுதுறையில் போக்குவரத்து நிறைந்த பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார் தலைமையிலான வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இதில், தனிநபர் கட்டணம் வசூலித்துக்கொண்டு பஸ்களைப் போல இயக்கப்பட்ட 3 வேன், தகுதிச்சான்று பெறப்படாத 2 ஆட்டோக்கள், சொந்த உபயோகத்துக்கான உரிமம் பெற்று வாடகைக்கு ஓட்டப்பட்ட 1 கார் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த வாகனங்களுக்கு மொத்தம் ரூ.1.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. நகரின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என்றும் பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கட்டாயம் முன் அனுமதி பெறப்பட வேண்டும் என மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார் தெரிவித்தார்.