3 கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை


3 கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை
x

3 கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது நீர் ஆதார பாதுகாப்பு குழு தலைவர் அலிராஜா தலைமையில் குன்னம் தாலுகா லெப்பைக்குடிகாடு, கீழக்குடிகாடு பென்னக்கோணம் ஆகிய 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி அவர்கள் கூறுகையில், பென்னக்கோணம் வடக்கு எல்லையில் கீழக்குடிகாடு வெள்ளாற்று தடுப்பணையில் 74 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதற்காக தமிழக அரசு வேப்பூர் கூட்டு குடிநீர் திட்டம் என்ற திட்டத்தை தொடங்கி பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே லெப்பைக்குடிகாடு, கீழக்குடிகாடு, பென்னக்கோணம் ஆகிய கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில் இந்த திட்டம் தொடங்கும் முன்பே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலரின் சுய லாபத்திற்காக இந்த திட்டம் கொல்லைப்புறமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வரிப்பணம் வீணாகும்

ஆற்றில் நிலத்தடி நீர் குறைந்துள்ளதால் எங்கள் கிராமங்களுக்கு வாரத்தில் 2 முறைதான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இப்படியிருக்க எப்படி 74 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகிக்க முடியும். எனவே இந்த திட்டத்தை வேறு பகுதியில் தொடங்க அரசுக்கு வலியுறுத்த மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இந்த திட்டம் தொடங்கினால் தோல்வியிலேயே முடிந்து மக்கள் வரிப்பணம் வீணாகி விடும்.

எனவே வேப்பூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தை இங்கு தொடங்கக்கூடாது. நீர் ஆதாரம் உள்ள வேறு பகுதியில் இந்த திட்டத்தை தமிழக அரசு தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம், என்றனர். மேலும் அவர்கள் வேப்பூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நீர் ஆதாரம் உள்ள வேறு பகுதியில் தொடங்கக்கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களில் சிலர் சென்று கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

விவசாயிகளை திரட்டி போராட்டம்

மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சுல்தான் மொய்தீன் தலைமையில், அக்கட்சியினர் கொடுத்த மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் 15 ஆண்டுகளாகியும் தொடங்கப்படாத சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்திற்கு விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட விளை நிலங்களை, மீண்டும் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்க தமிழக அரசை மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.

வேப்பந்தட்டை ஒன்றியம், நெய்குப்பை கிராம ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களில் 5 பெண்கள் வந்து கொடுத்த மனுவில், நெய்குப்பை கிராமத்தை சேர்ந்த சிலர் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை தூய்மை பணியாளர்களாக நியமிக்க எங்கள் மீது பொய் புகார் கொடுத்து பணியில் இருந்து நீக்க அரசு அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இல்லையென்றால் மாமூல் கொடுங்கள் என்று கூறுகின்றனர். இது தொடர்பாக வி.களத்தூர் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், நாங்கள் தொடர்ந்து பணிபுரியவும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் பூபதி கொடுத்த மனுவில், கீழக்கணவாய் கிராமத்தில் பொதுக்குளம் வண்டி பாதையை அகற்ற இனியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றால் விவசாயிகளை திரட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவோம் என்று கூறியிருந்தார்.

251 மனுக்கள்

கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 251 பெறப்பட்டன. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் தொண்டு நிறுவனம் இணைந்து குழந்தை திருமணத்தில் இருந்து மீட்கப்பட்ட மற்றும் பள்ளி இடைநிற்றல் குழந்தைகளுக்கு அளித்து வரும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தேவையான உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.


Next Story