நிழற்குடை கேட்டு 3 கிராம மக்கள் சாலை மறியல்


நிழற்குடை கேட்டு 3 கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 Dec 2022 12:15 AM IST (Updated: 3 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அருகே நிழற்குடை கேட்டு 3 கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடலூர்-சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடலூர்

பரங்கிப்பேட்டை,

கோரிக்கை

விழுப்புரம்-நாகை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை நான்குவழிப்பாதையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. கடலூர், சிதம்பரம், புதுச்சத்திரம் வழியாக செல்லும் இந்த சாலை பணி நீண்ட நாட்களாக நடைபெற்று வருவதால் சிதம்பரம் புதுச்சத்திரத்தை அடுத்த கீழ்பூவாணிக்குப்பம், ஆலப்பாக்கம், பெத்தான்குப்பம் ஆகிய கிராம மக்கள் சாலையை கடக்க பெரும் சிரமம் அடைந்து வருகிறார்கள். மழை, வெயில் காலங்களில் ஒதுங்கி நிற்க பயணிகள் நிழற்குடை இல்லாமலும் பரிதவித்து வருகிறார்கள்.

இதனால் பாதிக்கப்பட்ட 3 கிராம மக்கள் தங்களது பகுதியில் நெடுஞ்சாலையின் குறுக்கே போக்குவரத்துக்கு ஏதுவாக சுரங்கப்பாதை மற்றும் பயணிகள் நிழற்குடை, சர்வீஸ் சாலை அமைக்கவேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறையினரிடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த 3 கிராமங்களை சேர்ந்த மக்கள் 250-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 8 மணியளவில் கீழ்பூவாணிக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடலூர்-சிதம்பரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஏராளமான வாகனங்கள் இருபுறமும் நீண்ட வரிசையில் நின்றன.

பரபரப்பு

இதுபற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி மற்றும் புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சவார்த்தை நடத்தி, பயணிகள் நிழற்குடை, சர்வீஸ் சாலை, சுரங்கப்பாதை போன்றவை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 3 கிராம மக்களும் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு, ½ மணி நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.


Next Story