பஸ் வசதி கேட்டு 3 கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை


பஸ் வசதி கேட்டு 3 கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 18 July 2023 12:15 AM IST (Updated: 18 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பஸ் வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் மகாபாரதியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மயிலாடுதுறை


பஸ் வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் மகாபாரதியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல் கோரி 25 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 20 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 33 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 70, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 32 மனுக்களும், அடிப்படை வசதி கோரி 42 மனுக்களும் என மொத்தம் 222 மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் மகாபாரதி, சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் தரங்கம்பாடி தாலுகா பெரிய மடப்புரம், முக்கறும்பூர், மாத்தூர் கிராம மக்கள் கலெக்டர் மகாபாரதியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

பஸ் இயக்க வேண்டும்

எங்கள் கிராமங்களுக்கு பஸ் வசதி கிடையாது. மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோவில் ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டுமானால் 3 முதல் 5 கிலோமீட்டர் வரை கடந்து காளகஸ்தினாதபுரம், திருக்கடையூர் சென்றுதான் மற்ற ஊர்களுக்கு செல்ல முடியும். செம்பனார்கோவிலில் இருந்து பெரிய மடப்புரம், முக்கறும்பூர், மாத்தூர் வழியாக ஆக்கூர் வரை இயக்கப்பட்ட மினிபஸ்சும் 5 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

பஸ் வசதி இல்லாததால் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கும், பொதுமக்கள் வேலை, ஆஸ்பத்திரி, சுபகாரியங்களுக்கு செல்வதற்கும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே கிராம மக்களின் நலன் கருதி எங்கள் கிராமங்களின் வழியாக ஒரு நாளைக்கு 3 தடவையாவது அரசு பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். கூட்டத்தில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நரேந்திரன், தனித்துணை கலெக்டர் (சமூகபாதுகாப்புத் திட்டம்) கண்மணி, மாவட்ட வழங்கல் அலுவலர்(பொ) அம்பிகாபதி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story