3 வீடுகளை உடைத்த காட்டு யானைகள்


3 வீடுகளை உடைத்த காட்டு யானைகள்
x
தினத்தந்தி 4 May 2023 5:00 AM IST (Updated: 4 May 2023 5:01 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் காட்டு யானைகள் 3 வீடுகளை உடைத்து சேதப்படுத்தின. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை,

வால்பாறையில் காட்டு யானைகள் 3 வீடுகளை உடைத்து சேதப்படுத்தின. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

காட்டு யானைகள்

வால்பாறை, தமிழக-கேரள எல்லையை ஒட்டியுள்ள எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாடி வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வால்பாறை அருகே உள்ள சக்தி, தலநார், அய்யர்பாடி மற்றும் பாறைமேடு பகுதியில் முகாமிட்டு இருந்த 3 குட்டிகளுடன் 7 காட்டு யானைகள் வில்லோணி எஸ்டேட் ஆஸ்பத்திரி பணியாளர்கள் குடியிருப்பு வளாகத்தில் புகுந்தன.

பணியாளர் ராமலட்சுமி என்பவரது வீட்டின் சமையலறையை யானைகள் உடைத்தன. பின்னர் உடைந்த பகுதி வழியாக துதிக்கையை உள்ளே விட்டு, சமையல் அறையில் சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்குமா என்று தேடின. அந்த சமயத்தில் மின்சாரம் இல்லாமல் இருந்தது. மேலும் பொருட்கள் கீழே விழும் சத்தம் கேட்டது. உடனே ராமலட்சுமி, அவரது கணவர் சமையலறைக்கு சென்று பார்த்தனர்.

வீடுகளை உடைத்தது

அப்போது காட்டு யானைகள் கூட்டமாக நின்றிருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மற்றொரு அறைக்கு சென்று பதுங்கினர். மேலும் அவர்கள் சத்தம் போட்டனர். சிறிது நேரத்துக்கு பிறகு அங்கிருந்து சென்ற யானை கூட்டம், அருகில் உள்ள ஆளில்லாத பணியாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தன. அங்குள்ள பலா மரத்தில் பலாக்காய்களை பறித்து தின்றன. தொடர்ந்து அதே பகுதியில் உள்ள 2 வீடுகளை உடைத்து சேதப்படுத்தின. அங்கு சாப்பிட எதுவும் இல்லாததால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் உலா வந்தன. இதையடுத்து அதிகாலையில் குடியிருப்பு பகுதியில் இருந்து காட்டு யானைகள் வனப்பகுதிக்கு சென்றன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் யானைகள் மீண்டும் இரவில் குடியிருப்புக்குள் புகும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள், பணியாளர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். தகவல் அறிந்த வால்பாறை வனச்சரக வனத்துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டு காட்டு யானைகள் நடமாட்டத்தை கண் காணித்து வருகின்றனர்.


Next Story