பெண்ணிடம் 25 பவுன் நகைகளை திருடிய3 பெண்கள் கைது


பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் 25 பவுன் தங்க நகைகளை திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

தங்க நகைகள் திருட்டு

சென்னை மேற்கு வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி உமா (வயது 58). இவர் கடந்த மாதம் 8-ந் தேதி பரமத்தி வேலூரில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்காக கரூரில் இருந்து பஸ்சில் வேலூர் வந்தார். வேலூர் பஸ் நிலையத்தில் பஸ்சில் இருந்து கீழே இறங்கி உள்ளார். அப்போது பஸ்சில் அவருடன் நோட்டமிட்டு வந்த 3 பெண்களில் ஒருவர் சில்லரை காசுகளை கீழே கொட்டிவிட்டு அதை எடுத்துக்கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் மற்ற 2 பெண்கள் உமாவின் கவனத்தை திசை திருப்பிவிட்டு அவர் பேக்கில் வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகளை திருடி கொண்டு தலைமறைவாகி விட்டனர்.

அப்போது உமா தனது பையில் வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தங்க நகைகளை திருடிய பெண்களை தீவிரமாக தேடி வந்தனர்.

3 பெண்கள் கைது

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் வேலூர் பஸ் நிலையம் பின்புறம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 பெண்கள் போலீசாரை கண்டதும் ஓட ஆரம்பித்தனர். அவர்களை துரத்தி பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் திருப்பத்தூர் மாவட்டம், வடுகப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை, அதியமான் தெரு, அவ்வை நகரில் வசித்து வந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் சக்தி என்பவரின் 2 மனைவிகளான அமுதா (36), நந்தினி (30), அதே ஊரை சேர்ந்த தேவா என்பவரின் மனைவி பூமிகா என்கிற பரிமளா (25) என்பதும் தெரியவந்தது. அதனையடுத்து அவர்களிடம் இருந்து 15 பவுன் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். மீதமுள்ள 10 பவுன் தங்க நகைகளை விற்று செலவு செய்து விட்டதும் தெரிய வந்தது. பின்னர் போலீசார் நகை திருட்டில் ஈடுபட்ட அமுதா, நந்தினி, பரிமளா ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story