ரெயில் மூலம் ரேஷன் அரிசி கடத்திய 3 பெண்கள் கைது
கோவையில் இருந்து கேரளாவுக்கு ரெயில் மூலம் ரேஷன் அரிசி கடத்திய 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை
திருச்சியில் இருந்து கோவை வழியாக பாலக்காடு டவுனுக்கு பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் சிலர் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்வதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. பாலக்காடு செல்வதற்கான பயணிகள் ரெயில் கோவை ரெயில் நிலையத்தில் உள்ள 1-வது பிளாட்பாரத்திற்கு வந்தது. இதனையடுத்து கோவை ரெயில் நிலைய இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமையிலான போலீசார் ரெயிலில் ஏறி சோதனை நடத்தினர்.
அப்போது 3 பெண்கள் 500 கிலோ ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பெண்களையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருப்பூரை சேர்ந்த ஈஸ்வரி (வயது 45), ராஜலட்சுமி (50), போத்தனூரை சேர்ந்த மேரி (60) என்பது தெரியவந்தது இவர்கள் திருப்பூர் மற்றும் கோவையில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று 3 பெண்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.