பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் 3 பெண் கவுன்சிலர்கள் தர்ணா
பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் 3 பெண் கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
உப்பிலியபுரம்:
உப்பிலியபுரம் ஒன்றியம், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி கூட்டம், பி.மேட்டூரிலுள்ள பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) சதீஸ்கிருஷ்ணன், தலைவர் மேகலா வெள்ளையன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 13 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் ெதாடங்கியதும், கவுன்சிலர்கள் பிரியதர்ஷினி, பத்மா, சரண்யாதேவி ஆகிய 3 கவுன்சிலர்களும் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள், தங்களது வார்டுகளில் அடிப்படை தேைவகளான சாலை மேம்பாட்டு பணிகள், தெரு விளக்குகள், குடிநீர் வசதி போன்ற கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதாகவும், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் என்ற காரணத்தினால் உதாசீனப்படுத்தப்படுவதாகவும், தங்களது வார்டுக்கான செலவீனங்களை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதையடுத்து செயல் அலுவலர், தலைவர் ஆகியோர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் 3 கவுன்சிலர்களும் கூட்டத்தை நிராகரித்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பேரூராட்சி துணை தலைவர் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் கையெழுத்து மட்டும் போட்டுச் செல்வதாகவும் புகாரெழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.