டிரான்ஸ்பார்மர் வெடித்து 3 பெண்கள் படுகாயம்


டிரான்ஸ்பார்மர் வெடித்து 3 பெண்கள் படுகாயம்
x

ஆத்தூரில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர். மேலும் 7 பன்றிகள் செத்தன.

சேலம்

ஆத்தூர்:

டிரான்ஸ்பார்மர் வெடித்தது

ஆத்தூர் புதுப்பேட்டையில் இருந்து முல்லைவாடி செல்லும் சாலையில் உள்ளது ரங்கன் நகர். இந்த பகுதியில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் நேற்று காலை 11 மணியளவில் திடீரென வெடித்தது. இதனால் அதில் இருந்த மின்சார வயர்கள் அறுந்து கீழே விழுந்தன. அப்போது டிரான்ஸ்பார்மர் அருகில் அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி ராதிகா (வயது 27), மணி என்பவரின் மனைவி மாரியம்மாள் (29), பெரியசாமி மனைவி முத்தாள் (50) ஆகிய 3 பேர் மீதும் மின்சார வயர்கள் விழுந்தன. இதில் மின்சாரம் தாக்கியதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் ராதிகா, மாரியம்மாள், முத்தாள் ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

7 பன்றிகள் செத்தன

மேலும் டிரான்ஸ்பார்மர் அருகில் படுத்து இருந்த 7 பன்றிகள் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் 7 பன்றிகளும் பரிதாபமாக செத்தன. இது குறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து டிரான்ஸ்பார்மரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டது.

தொடர்ந்து ஆத்தூர் நகர போலீசார் இ்ந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிக மின் அழுத்தம் காரணமாக டிரான்ஸ்பார்மர் வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story