மின்சாரம் பாய்ந்து 3 தொழிலாளர்கள் படுகாயம்
ஆலங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஏணி எடுத்து சென்ற போது...
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பாத்தம்பட்டி முக்கம் சாலையில் தனியார் கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் மேல்பகுதிக்கு 20 அடி நீளம் உள்ள ஏணியை கொண்டு செல்வதற்கு ஏற்பாடு நடைெபற்றது.
இதையடுத்து தொழிலாளர்களான கல்லாலங்குடி பகுதியை சேர்ந்த மாயழகு (வயது 39), முருகேசன் (40), ஆலங்குடி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த கோவிந்தன் (27) ஆகிய 3 பேரும் ஏணியை கட்டிடத்தின் மேலே எடுத்து சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏணி உயர்மின் அழுத்த மின்சார கம்பியில் உரசியது. இதில் 3 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
3 பேர் படுகாயம்
இதில் படுகாயமடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மின்சாரம் பாய்ந்து 3 தொழிலாளர்களும் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும் ஆலங்குடி பகுதியில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் இதுபோன்ற பல விபத்துக்கள் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது.
எனவே உடனடியாக மின்வாரிய துறையினர் குடியிருப்பு பகுதி மற்றும் வர்த்தக நிறுவனங்கள் வழியாக தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.