இறைச்சிக்கடைக்காரருக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை
திண்டுக்கல் மாவட்டம் கோட்டூரை சேர்ந்தவர் மார்சிலின் (வயது 42). இவர் பல்லடம் கள்ளக்கிணறு பகுதியில் கறிக்கோழிக்கடை வைத்திருந்தார். இந்தநிலையில் கடந்த 18-4-2021 அன்று கடைக்கு இறைச்சி வாங்க வந்த 14 வயது பள்ளி மாணவிக்கு மார்சிலின் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பல்லடம் மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து மார்சிலினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. மார்சிலினுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளுக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் அரசு வழங்கவும் நீதிபதி பரிந்துரைத்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகிவாதாடினார்.