விளம்பர பலகை, பேனர் வைத்தால் 3 ஆண்டுகள் சிறை -தமிழக அரசு அறிவிப்பு


விளம்பர பலகை, பேனர் வைத்தால் 3 ஆண்டுகள் சிறை -தமிழக அரசு அறிவிப்பு
x

உள்ளாட்சி அமைப்பு விதிகளை மீறி விளம்பர பலகை, பேனர், பதாகைகளை வைத்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் பல்வேறு நிறுவனங்கள் சாலையோரம் பேனர்களை வைத்து விளம்பரம் தேடிக்கொள்கின்றன. சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற பேனர்கள், பதாகைகள், விளம்பர பலகைகளை, எங்கெங்கெல்லாமோ பல்வேறு நிறுவனங்கள் பொருத்தி வைத்திருந்தன. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் மிகக் கடுமையான உத்தரவுகளை ஐகோர்ட்டு வழங்கியது. அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட பேனர்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அகற்றியாக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி பேனர்கள், பதாகைகள், விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன. அதன் பிறகுதான் சென்னையின் அழகு ஓரளவு வெளியே தெரியவந்தது. சென்னை துறைமுகம், ஐகோர்ட்டு, மின்சார ரெயில் ஓட்டம், பாலங்கள் போன்றவற்றை சாதாரணமாக பார்க்க முடிந்தது.

பேனரால் மரணம்

இதற்குப் பின்னர் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளும் பேனர்கள், பதாகைகள், விளம்பர பலகைகளை பொருத்துவதை உன்னிப்பாக கண்காணித்து வந்தன. ஆனாலும் சில இடங்களில் சில முக்கிய நிகழ்ச்சிகளின்போது அனுமதி இல்லாமல் பேனர்கள் வைக்கப்பட்டு, அவை திடீரென்று சரிந்து விழுந்து, சிலருக்கு மரணத்தை ஏற்படுத்தும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உரிமம் பெறாமல்....

2022-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 35-ம் பிரிவு மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திருத்தச் சட்டத்தின்படியும் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதி 2023-ன்படியும், விளம்பர பலகைகள், பேனர்கள் மற்றும் பதாகைகள் ஆகியவை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெறாமல் நிறுவப்படக்கூடாது.

இந்தச் சட்டம் கடந்த ஏப்ரல் 13-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. உரிமம் பெறாமல் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விளம்பர பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவை உடனடியாக (பிரிவு 117-ஓ ன்படி) அகற்றப்பட வேண்டும்.

உரிம காலம் முடிந்தால்....

உரிமக்காலம் முடிந்தபின்பும், சட்ட விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவையும் உடனடியாக (பிரிவு 117-பி-ன்படி) அகற்றப்பட வேண்டும். இந்த பிரிவுகளான 117-ஓ, 117-பி ஆகியவற்றின்படி, விளம்பர பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அகற்றத் தவறினால், அவற்றை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே அகற்றி விடும்.

பின்பு, அதற்கான செலவினம், பிரிவுகள் 117-ஓ, 117-பி மற்றும் விதிகள் 338, 345 ஆகியவற்றின்படி அந்தந்த நிறுவனங்களிடம் இருந்து அல்லது தனி நபர்களிடம் இருந்து வசூலிக்கப்படும்.

3 ஆண்டு சிறை

இந்த விதிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனம், தனிநபர், நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர் ஆகியோர் மீது 3 ஆண்டுகள் சிறை தண்டனையோ அல்லது ரூ.25 ஆயிரம் அபராதமோ அல்லது இவை இரண்டும் சேர்த்தோ விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உரிய அனுமதியின்றி பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அமைக்கும் நிறுவனம், தனிநபர், நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர் ஆகியோர் மீது ஒரு ஆண்டு சிறை தண்டனையோ அல்லது ரூ.5 ஆயிரம் அபராதமோ அல்லது இவை இரண்டும் சேர்த்தோ விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பேனர் வைத்தவரே பொறுப்பு

விதிகள் 322, 341-ல், வரையறுக்கப்பட்டுள்ள இடங்களில் மற்றும் அளவுகளில் மட்டுமே விளம்பர பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெற்று அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விளம்பர பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றின் மூலம் பொதுமக்களுக்கு எதிர்பாராத விபத்துகள் ஏற்பட்டு, பொதுமக்கள் காயமடைந்தாலோ அல்லது ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டாலோ அதற்குரிய இழப்பீடு வழங்குவதற்கு விளம்பர பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அமைத்த நிறுவனமும், தனிநபரும், நிலம் மற்றும் கட்டிட உரிமையாளரும் முழு பொறுப்பாவார்கள். அவர் மீது உரிய குற்றவியல் வழக்கு பதியப்பட்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story