வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
கொடைக்கானலில் வியாபாரி வீட்டில் பணம் திருடிய வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியை சேர்ந்தவர் அசன். இவர், தனது வீட்டின் அருகே பல சரக்கு கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 18.12.2022-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு அருகே உள்ள கடைக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றார். பின்னர் பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்தை திருடி சென்று விட்டார்.
இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மதுரை தெற்கு வாசல் பகுதியை சேர்ந்த பொன்மணி (வயது 22) என்பவர், அசன் வீட்டில் பணத்தை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து பொன்மணியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மீது, கொடைக்கானல் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கார்த்திக், குற்றம்சாட்டப்பட்ட பொன்மணிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராதம் கட்ட தவறும்பட்சத்தில், மேலும் 6 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.