10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை; ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
பாலியல் தொல்லை
ஈரோடு கொல்லம்பாளையம் லோகநாதபுரத்தை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் ஆறுமுகம் (வயது 26). கட்டிடத்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ந் தேதி ஆறுமுகம், 15 வயதுள்ள ஒரு மாணவியுடன் பேசி உள்ளார். 10-ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியை அவர் ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், சில்மிஷத்திலும் ஈடுபட்டார்.
இதுகுறித்து மாணவி, அவருடைய தந்தையிடம் கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து மாணவியின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஆறுமுகத்தை கைது செய்தனர்.
3 ஆண்டு சிறை
இது தொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பு கூறினார். அதில் அவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆறுமுகத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி மாலதி பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜராகி வாதாடினார்.