மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியருக்கு 3 ஆண்டு சிறை


மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியருக்கு 3 ஆண்டு சிறை
x

மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தேனி

கம்பம் அருகே சுருளிப்பட்டியை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் புதிதாக கட்டிய வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு சுருளிப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு மனு கொடுத்தார். அப்போது அங்கு பணியாற்றிய மின்வாரிய ஊழியர் சிவசாமி என்பவர் மின் இணைப்பு பெறுவதற்கு ரூ.7 ஆயிரம் செலவு ஆகும் என்றார். மின் இணைப்புக்கு ரூ.2 ஆயிரம் தானே என்று மகேந்திரன் கேட்டதற்கு, ரூ.2 ஆயிரம் கட்டணமும், ரூ.5 ஆயிரம் லஞ்சமாகவும் கொடுக்க வேண்டும் என்றார்.

மீண்டும் அவர் சிவசாமியை சந்தித்து கேட்டபோது, லஞ்ச பணத்தில் ரூ.1,000 குறைத்துக்கொண்டு மொத்தம் ரூ.6 ஆயிரம் கொடுக்குமாறு கேட்டார். இதுகுறித்து தேனி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் மகேந்திரன் புகார் செய்தார். அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினர். அவர் அதை சுருளிப்பட்டி மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று சிவசாமியிடம் கொடுத்தார். அப்போது அங்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் சிவசாமியை கைது செய்தனர்.

இந்த வழக்கு தேனி மாவட்ட தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சிவசங்கரன் ஆஜராகி வாதாடினார். வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி கோபிநாதன் இன்று தீர்ப்பளித்தார். அப்போது லஞ்சம் வாங்கிய சிவசாமிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


Related Tags :
Next Story