வெளிநாட்டின் விலை உயர்ந்த பொருளுக்கு ஆசைப்பட்டு ரூ.30½ லட்சத்தை இழந்த 3 இளம்பெண்கள்


வெளிநாட்டின் விலை உயர்ந்த பொருளுக்கு ஆசைப்பட்டு  ரூ.30½ லட்சத்தை இழந்த 3 இளம்பெண்கள்
x
தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாடுகளில் இருந்து பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறியதை நம்பிய 3 இளம்பெண்கள் ரூ.30 லட்சத்தை இழந்த சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

வெளிநாடுகளில் இருந்து பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறியதை நம்பிய 3 இளம்பெண்கள் ரூ.30 லட்சத்தை இழந்த சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரூ.30½ லட்சம் மோசடி

குமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் ஆன்லைன் மூலம் பண மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் சிக்கி ஏராளமான மக்கள் கோடிக்கணக்கில் பணத்தை இழந்து தவித்து வருகிறார்கள். இப்படி மோசடியால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் தினம், தினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்து வருகிறார்கள். அந்தவகையில் வெளிநாட்டில் இருந்து பரிசுகள் அனுப்பியுள்ளதாக கூறி குமரி மாவட்டத்தை சேர்ந்த 3 பெண்களிடம் மொத்தம் ரூ.30 லட்சத்து 29 ஆயிரத்து 400 வரை மோசடி நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது குமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் சவுமியா (வயது 28). இவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

நான் மருதங்கோடு பகுதியில் எனது குடும்பத்துடன் வசித்து வருகிறேன். சம்பவத்தன்று எனது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர் தான் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி என்றும், தற்போது இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் கம்பெனியில் வேலை பார்த்து வருவதாகவும் கூறினார்.

பரிசு பொருள்

பின்னர் அடிக்கடி எனது செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசிய அந்த நபர், இங்கிலாந்தில் இருந்து ஒரு பரிசு பொருட்கள் தங்களுக்கு அனுப்பி உள்ளதாக கூறினார். மேலும் அதன் மதிப்பு மிக அதிகமாகும் என்பதால் சுங்க அனுமதிக்கான பணத்தை மட்டும் செலுத்துங்கள் என்றார்.

இதனை தொடர்ந்து ஒரு பெண் எனது செல்போனுக்கு தொடர்பு கொண்டு தங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பரிசு வந்திருப்பதாகவும், அதற்காக சுங்க அனுமதிக்கான தொகை ரூ.40 ஆயிரம் செலுத்த வேண்டும். இதுபோன்ற பல்வேறு காரணங்களைக் கூறி மொத்தம் ரூ.9 லட்சத்து 49 ஆயிரம் கேட்டனர். பின்னர் அவர்கள் பல்வேறு வங்கி கணக்குகளை எனக்கு அனுப்பி அதில் பணத்தை செலுத்துமாறு தெரிவித்தனர். அவர்களது பேச்சை நம்பி நானும் அவர்கள் தெரிவித்த வங்கி கணக்குகளில் பல தவணையாக ரூ.9 லட்சத்து 49 ஆயிரத்தை செலுத்தினேன். அதன் பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

அதன் பின்னரே நான் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன். எனவே என்னிடம் பணமோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுதர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார். இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வங்கி கணக்கில்...

அருமனை அருகே அம்பலகாலை பகுதியைச் சேர்ந்தவர் ரெஜினா (34) அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-

எனது செல்போனிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அந்த குறுஞ்செய்தி அனுப்பிய நபர் என்னுடன் தொலைபேசி மூலம் பேசினார். அவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், அங்கிருந்து எனக்கு சில பரிசு பொருட்களை அனுப்பி வைப்பதாகவும் கூறினார். லண்டனில் இருந்து பரிசு பொருட்கள் அனுப்பும்போது அதற்கு பணம் செலுத்த வேண்டும். அந்த பணத்தை செலுத்தி பரிசுகளை பெற்று கொள்ளுமாறு தெரிவித்தார். அதற்காக சில வங்கி கணக்குகளை எனக்கு அனுப்பி வைத்து அதில் ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை செலுத்த வேண்டும் என கூறினார்.

நானும் பல கட்டங்களாக அந்த வங்கி கணக்குகளுக்கு ரூ.5 லட்சத்து 70 ஆயிரத்தை செலுத்தினேன். அதன் பிறகு தான் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். என்னை ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுதர வேண்டும் என கூறியிருந்தார். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

பணத்தை மீட்டு தர வே0ண்டும்

இதேபோல் அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாத்தி (35) அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-

வாலிபர் ஒருவர் பேஸ்புக் மூலமாக நண்பராக பழகி தனக்கு பரிசு பொருள் லண்டனில் இருந்து அனுப்பி வைப்பதாக கூறி ரூ.15 லட்சத்து 10 ஆயிரத்தை மோசடி செய்து விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுதர வேண்டும் என கூறியிருந்தார். இதுதொடர்பாகவும் சைபர்கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குமரி மாவட்டத்தில் இளம்பெண்கள் 3 பேரிடம் மொத்தம் ரூ.30½ லட்சம் வரை மோசடி நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story