கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
திருவண்ணாமலை, குப்பத்தில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருவண்ணாமலை-திண்டிவனம் பைபாஸ் சாலை சந்திப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது 23), போளூர் சிவராஜ் நகர் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரத்குமார் (29) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1,250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோல கண்ணமங்கலம் அருகே குப்பம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் வேலூர் கொணவட்டத்தை சேர்ந்த ஜெயசூர்யா (21) என்பவர் கஞ்சா விற்ற போது, கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் கைது செய்தனர்.