வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பொருளாக விற்ற 3 வாலிபர்கள் கைது


வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பொருளாக விற்ற 3 வாலிபர்கள் கைது
x

ராணிப்பேட்டையில் வலிநிவாரண மாத்திரைகளை போதைப் பொருளாக விற்பனை செய்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை

போதைப் பொருளாக...

ராணிப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் டாக்டர்களின் ஆலோசனை பெறாமல் வலி நிவாரண மாத்திரைகளை போதை பொருளாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் வந்தது.

அதன்பேரில் ராணிப்பேட்டை மாந்தாங்கல் பகுதியில் கருமாரி அம்மன் கோவில் அருகில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் மேற்பார்வையில், சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஏட்டு ரங்கநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

3 வாலிபர்கள் கைது

அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த வாலிபர்கள் 3 பேரை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், ராணிப்பேட்டையை சேர்ந்த பவுல் சுனில் (வயது 23) மற்றும் 19 வயது வாலிபர்கள் 2 பேர் என தெரியவந்தது.

இவர்கள் வெளி மாநிலத்தில் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி, போதைப் பொருளாக ராணிப்பேட்டை பகுதி இளைஞர்களிடம் விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டனர். இவ்வித மாத்திரைகளை இளைஞர்கள் தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் ஏற்றி ஒருவித போதையை அனுபவித்து வருவது தெரியவந்தது. குறித்து மாவட்ட மதுவிலக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 300 மாத்திரைகளை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story