மளிகை கடைக்காரருக்கு கத்தியால் குத்தி 3 வாலிபர்கள் கைது
கரூரில் மளிகை கடைக்காரரை கத்தியால் குத்தி பணம், செல்போனை பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மளிகை கடைக்காரர்
கரூர் அருகே உள்ள செல்லாண்டி பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 50). மளிகை கடைக்காரர். இவர் நேற்று முன்தினம் அதிகாலை கரூரில் உள்ள காமராஜர் மார்க்கெட் பகுதிக்கு சென்று மளிகை கடைக்கு தேவையான காய்கறிகளை வாங்கிக்கொண்டு மீண்டும் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
கத்திக்குத்து
கரூர் லைட்ஹவுஸ் அருகே உள்ள மக்கள் பாதை பகுதியில் செந்தில் குமார் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது கரூர்-ஆத்தூர் பிரிவு பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (22), மாவடியான்கோவில் தெருவை சேர்ந்த உதயபிரகாஷ் (21), சஞ்சய்குமார் (20), வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஹேமல் (20) ஆகிய 4 பேரும் சேர்ந்து செந்தில்குமாரை வழிமறித்தனர். பின்னர் அவரிடம் இருந்த செல்போனை கேட்டுள்ளனர்.அதற்கு அவர் செல்போனை தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் செந்தில்குமாரை தகாதவார்த்தையால் திட்டி கத்தியால் குத்தினர். பின்னர் அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன், ரூ.1,200-ஐ பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
3 பேர் கைது
இதில் படுகாயம் அடைந்த செந்தில்குமார் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து செந்தில்குமாரின் தந்தை ராமசாமி (75) கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் வழக்குப்பதிந்து, மோகன்ராஜ், உதயபிரகாஷ், ஹேமல் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். தப்பியோடிய சஞ்சய்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.