இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது
வாணியம்பாடியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் பகுதிக்கு வேலூரை சேர்ந்த மாலிக் பாஷா என்பவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு உறவினரின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவருடைய இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்ற அவர் ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்த பார்த்தபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மாலிக் பாட்ஷா நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை நகர போலீசார் புதூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் முன்னுக்குப்பின் பதில் அளித்ததால் போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் நியூடவுடன் பகுதியில் ஒரு வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததை நான்கு நாட்களுக்கு முன்பு திருடியதாக தகவல் அளித்தார்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் மேலும் இருவர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வாணியம்பாடி- கட்டைமேடுபகுதியை சேர்ந்த சுண்டு என்கிற விஷ்ணு (20), விட்டல் என்கிற சூர்யா (18), சாரதி (18) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் வாணியம்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.