துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 வாலிபர்கள் கைது
கோவையில் துப்பாக்கியுடன் சுற்றிதிரிந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட திட்டமிட்டது அம்பலமாகியுள்ளது.
கோவை,
கோவையில் துப்பாக்கியுடன் சுற்றிதிரிந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட திட்டமிட்டது அம்பலமாகியுள்ளது.
இதுகுறித்து போலீசிஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
போலீஸ் கண்காணிப்பு
திருவண்ணாமலையில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம். மையங்களில் ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனையொட்டி கோவை மாவட்டம் முழுவதும் ஏ.டி.எம். மையங்களில் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. போலீசார் இரவு முழுவதும் ரோந்து சென்று அந்தந்த போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட ஏ.டி.எம். மையங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உக்கடம் சப்-இன்ஸ்பெக்டர் விவேக் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ரெயில் நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர் ரெயில்வே பாலம் அருேக சந்தேகப்படும்படியாக 3 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர்.
துப்பாக்கியுடன் 3 பேர் பிடிபட்டனர்
அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றனர். இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தனர். அதில் துப்பாக்கி, அரிவாள் இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்கள் 3 பேரையும் உக்கடம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் திருச்சி சமயபுரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி அஜித்குமார் (வயது 28), கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவரும், தற்போது கோவை பீளமேட்டில் தங்கி இருந்து டிரைவர் வேலை செய்து வருபவருமான சந்திரசேகர் (35), சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜபுரத்தை சேர்ந்த கவுதம் (28) என்பதும் தெரியவந்தது.
கொள்ளையில் ஈடுபட திட்டம்
தொடர்ந்து போலீசார் துப்பாக்கி மற்றும் அரிவாளுடன் சுற்றித்திரிந்தற்கான காரணம் குறித்து 3 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அவர்கள் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் கொள்ளையடிக்க திட்டம் போட்டு துப்பாக்கி மற்றும் அரிவாளுடன் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அஜித்குமார், சந்திரசேகர், கவுதம் ஆகிய 3 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.