இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் கஞ்சா பறிமுதல்


இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் கஞ்சா பறிமுதல்
x

மீமிசல் கடலோர பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

இலங்கை படகு

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே மீமிசலை அடுத்துள்ள குமரப்பன் வயல் கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம ஆசாமிகள் சிலர் சுற்றித்திரிந்தனர். இதனைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் அருகே சென்று பார்த்துள்ளனர். அப்போது இலங்கையை சேர்ந்த படகு ஒன்று இருந்தது. மீனவர்களை பார்த்ததும் அந்த ஆசாமிகள் படகை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ெசன்று விட்டனர்.

இதையடுத்து, கடற்கரையோரத்தில் சாக்கு மூட்டை மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் இருந்தன. இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் மீமிசல் கடலோர காவல் பாதுகாப்பு குழுமத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

45 கிலோ கஞ்சா பறிமுதல்

இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கடலோர காவல் குழும போலீசார் அந்த மூட்டையை பிரித்து பார்த்துள்ளனர். அப்போது அதில் பண்டல் பண்டலாக கஞ்சா இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து கடலோர காவல் குழும போலீசார் கஞ்சாவையும், 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து பாலக்குடி கடலோர காவல் குழும காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். பின்னர் இதுகுறித்து கடலோர காவல் குழும போலீசார் மற்றும் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்டம் புதுவண்டி பாளையம் மருது நகரை சேர்ந்த கார்த்திக் (வயது 43) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மீமிசலில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா 45 கிலோ இருந்தது. அதன்மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மீமிசல் கடலோர பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story