விவசாயி வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை
எடப்பாடி அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
எடப்பாடி:-
எடப்பாடி அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
விவசாயி
சேலம் மாவட்டம், எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பேரூராட்சி பில்லுக்குறிச்சி ஆசாரிக்காடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 38), விவசாயி. இவருடைய மனைவி சிவகாமி, இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கோவிந்தராஜின் வீடு, அந்த பகுதியில் அவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. நேற்று காலையில் வழக்கம்போல் கோவிந்தராஜின் மகள்கள் இருவரும் பள்ளிக்கு சென்று விட்டனர். இந்த நிலையில், கோவிந்தராஜ், அவருடைய மனைவியுடன் சேலம் மாவட்டம், மேச்சேரி பகுதியில் உள்ள அவரது உறவினர் ஒருவர் இறந்ததை அடுத்து துக்கம் விசாரிக்க சென்றிருந்தார். இந்தநிலையில் மாலை கோவிந்தராஜின் மகள்கள் காலாண்டு தேர்வு முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்தனர்.
அப்போது வீட்டின் பிரதான கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பாாத்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், அங்கு வந்தவர்களிடம் செல்போனை வாங்கி தங்களின் தந்தை கோவிந்தராஜிக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த கோவிந்தராஜ், வீட்டுக்குள் சென்று பார்த்தார்.
30 பவுன் நகைகள் கொள்ளை
அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தார். பட்டப்பகலில் தோட்டத்து வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை போனது குறித்து கோவிந்தராஜ் பூலாம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் கொள்ளையர்கள் விட்டுச்சென்ற தடயங்களை பதிவு செய்தனர்.
மேலும் விவசாயி வீட்டில் கொள்ளை சம்பவம் குறித்து, சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் சந்திரலேகா ஆகியோரும் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் தான், பட்டப்பகலில் விவசாயியின் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும் கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் பூலாம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.