திருவொற்றியூரில் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் 30 கிராமங்கள் துண்டிப்பு


திருவொற்றியூரில் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் 30 கிராமங்கள் துண்டிப்பு
x

திருவொற்றியூரில் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் 30 கிராமங்கள் துண்டிக்கப்பட்டது.

சென்னை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் திருவொற்றியூர், எண்ணூர், மணலியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்தது.

திருவொற்றியூர் மேற்கு பகுதிக்கு செல்லும் மாணிக்கம் நகர் ெரயில்வே சுரங்கப்பாதையை கலைநகர், ஜோதி நகர், ராஜா சண்முக நகர், அண்ணாமலை நகர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்பவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

தற்போது சுரங்கப்பாதை முழுவதும் மழை நீர் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் சுரங்கப்பாதை மீது ஏறி ெரயில்வே தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். மணலி விரைவு சாலை வழியாக வாகனங்களில் செல்கின்றனர். மணலி விரைவு சாலையிலும் தண்ணீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் தட்டு தடுமாறி சென்று வருகின்றனர்.

திருவொற்றியூர் மேற்கு பகுதி முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் 25-க்கும் மேற்பட்ட நகர்களில் தெருக்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இதனால் திருவொற்றியூர் மேற்கு பகுதியில் உள்ள 30 கிராமங்கள் துண்டிக்கப்பட்டு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கினர்.

மாணிக்கம் நகர் சுரங்கப்பாதையை அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. குப்பன் பார்வையிட்டார். சம்பவ இடத்துக்கு வந்த திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர், மேற்கு பகுதி மக்கள் வெளியேறும் வகையில் சுரங்கப்பாதையில் தேங்கி உள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.

அதன்படி சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை ராட்சத மின்மோட்டார்கள் மூலம் அகற்றி, அந்த சுரங்கப்பாதையில் மீண்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட ஏழுமலை நகர், சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. நகராட்சி நிர்வாகம் சார்பில் ராட்சத மோட்டார்களை கொண்டு மழை நீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.

இந்த பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் நாசர் பார்வையிட்டார். முழங்கால் அளவு தேங்கி நின்ற மழை நீரில் இறங்கி சென்று குடியிருப்புவாசிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது திருவேற்காடு நகர மன்ற தலைவர் மூர்த்தி, நகராட்சி கமிஷனர் ரமேஷ் உடன் இருந்தனர்.

பெரவள்ளூர் போலீஸ் நிலையம், கந்தசாமி சாலை, பூம்புகார் நகர், திருப்பதி நகர், பாலாஜி நகர், பாபா நகர், அஞ்சுகம் நகரில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதனை மோட்டார் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.

திரு.வி.க. நகர் தொகுதியில் உள்ள புளியந்தோப்பு, ஓட்டேரி, கன்னிகாபுரம் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளன. அம்பத்தூர் பகுதியில் பெய்த மழையால் அம்பத்தூர் ஏரி மற்றும் அயப்பாக்கம் ஏரி வழியாக கொரட்டூரில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய வளாகத்தில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

ஆவடி, திருமுல்லைவாயல், அயப்பாக்கம், அண்ணனூர், மிட்டனமல்லி, கோயில்பதாகை, பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலும் பலத்த மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடியில் மட்டும் 17 செ.மீ மழை பெய்துள்ளது.

இதனால் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வசந்தம் நகர், சங்கர் நகர், ஜோதி நகர், மூன்று நகர், கன்னிகாபுரம், கண்ணடபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

பருத்திப்பட்டு ஏரி நிரம்பி உள்ளதால் அதிலிருந்து ஆவடி - பூந்தமல்லி சாலை வழியாக கால்வாயில் உபரிநீர் திறந்து விடுவதால் அந்த நீர் வசந்தம் நகர் வழியாக கால்வாயில் செல்கிறது. ஆனால் மழை நீர் செல்வதற்கு போதிய வழிகள் இல்லாததால் வசந்தம் நகர் முழுவதும் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் காட்சி அளிக்கிறது.

ஆவடி போலீஸ் நிலையத்தின் உள்ளே மழை நீர் தேங்கி வெள்ளைக்காடாய் காட்சியளித்தது. இதனால் போலீஸ் அதிகாரிகள், போலீசார் மற்றும் புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். அமைச்சர் நாசர், சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு மழை நீரை அகற்ற உத்தரவிட்டார். ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் மோட்டார் வைத்து மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அதேபோல் வசந்தம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் நாசர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டனர். அப்போது ஆவடி மாநகராட்சி கமிஷனர் க.தர்ப்பகராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் ரேடியல் சாலையில் பெருமாள் நகர் சந்திப்பில் கனமழை காரணமாக சாலையில் வெள்ளநீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். அந்த பகுதியில் ஆய்வு செய்த பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன்படி 2 பொக்லைன் எந்்திரம் மூலம் மழைநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சீரமைத்து வெள்ள நீர் கீழ்கட்டளை ஏரிக்கு கால்வாய்களில் வழியாக செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது மண்டல தலைவர் ஜோசப் அண்ணாதுரை, கவுன்சிலர் கலைச்செல்வி வெங்கடேசன் உடன் இருந்தனர்.


Next Story