முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினர் 300 பேர் கைது
இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினர் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
முற்றுகை
சனாதனம் குறித்து கருத்து கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக கோரியும், வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகத்தை பா.ஜ.க. ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் முற்றுகை போராட்டம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி வேலூர்- ஆற்காடு சாலையில் காகிதப்பட்டறை பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். அங்கு சாலையில் பேரிகார்டுகள் வைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கை செய்திருந்தனர்.
மேலும் அந்த சாலையில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டிருந்தது.
அறிவித்தபடி பா.ஜ.க.வினர் அங்கு திரண்டனர். தொடர்ந்து அவர்கள் இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
300 பேர் கைது
தொடர்ந்து முற்றுகையிட முயன்ற அரசு தொடர்பு பிரிவு மாநில தலைவர் பாஸ்கர், பா.ஜ.க. வேலூர் மாவட்ட தலைவர் மனோகரன், கவுன்சிலர் சுமதி, அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேசன், ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் சுமார் 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயங்கி விழுந்தார்
கைது செய்யப்பட்ட பா.ஜ.க.வினர் கிரீன்சர்க்கிள் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் இரவு 7 மணியளவில் லத்தேரியை சேர்ந்த தேவராஜ் என்பவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பா.ஜ.க.வினர் உடனடியாக அவரை மீட்டு ஆட்டோவில் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு தேவராஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட பா.ஜ.க.வினர் இரவு 9 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.
பொது இடத்தில் சட்ட விரோதமாக கூடியது, போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் பா.ஜ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.