சுங்கச்சாவடிகளால் கிடப்பில் கிடக்கும் ரூ.300 கோடி திட்டம்


சுங்கச்சாவடிகளால் கிடப்பில் கிடக்கும் ரூ.300 கோடி திட்டம்
x
தினத்தந்தி 24 Aug 2023 5:00 AM IST (Updated: 24 Aug 2023 5:00 AM IST)
t-max-icont-min-icon

கோவை நீலாம்பூரில் இருந்து மதுக்கரை வரை ரூ.300 கோடியில் 4 வழிச்சாலை அமைக்கும் திட்டம் சுங்கச்சாவடிகளால் கிடப்பில் கிடக்கிறது. தொடர்ந்து சிக்கல் நீடிப்பதால் தீர்வு காண சிறப்புக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கோயம்புத்தூர்


கோவை


கோவை நீலாம்பூரில் இருந்து மதுக்கரை வரை ரூ.300 கோடியில் 4 வழிச்சாலை அமைக்கும் திட்டம் சுங்கச்சாவடிகளால் கிடப்பில் கிடக்கிறது. தொடர்ந்து சிக்கல் நீடிப்பதால் தீர்வு காண சிறப்புக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.


புறவழிச்சாலை


சேலத்தில் இருந்து கோவை வழியாக கேரளா செல்ல முக்கிய சாலையாக கொச்சி சாலை உள்ளது. இந்த சாலை சேலத்தில் இருந்து கோவை வரை 6 மற்றும் 4 வழியாக இருக்கிறது. நீலாம்பூரில் இருந்து மதுக்கரை வரை 28 கி.மீ. தூரத்துக்கு இருவழிச்சாலையாக உள்ளது. அதனை தொடர்ந்து மதுக்கரையில் இருந்து தமிழக-கேரள எல்லையான வாளையாறு வரை சில பகுதிகளில் 4 வழியாகவும், 6 வழியாகவும் இந்த சாலை அமைக்கப்பட்டு உள்ளது. நீலாம்பூரில் இருந்து மதுக்கரை வரை உள்ள இந்த புறவழிச்சாலை எல் அண்டு டி சாலை என்று அழைக்கப்படுகிறது. 10 மீட்டர் அகலம் மட்டுமே கொண்ட இந்த சாலையை எல் அண்டு டி நிறுவனம் பராமரித்து வருகிறது.


அகலப்படுத்த முடிவு


இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக கனரக வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் செல்கின்றன. மற்ற பகுதிகளில் சாலை அகலமாகவும், இந்த 28 கி.மீ. தூரத்துக்கு சாலை குறுகலாக இருப்பதுடன், பல இடங்களில் சந்திப்புகளும் உள்ளன. இதன் காரணமாக இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பும் நடந்து வருகிறது. எனவே இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கீழ் உள்ள இந்த சாலையை அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.


ரூ.300 கோடி திட்டம்


ஆனால் இந்த சாலையில் 6 இடங்களில் சுங்கச்சாவடி இருப்பதாலும், அந்த சுங்கச்சாவடிகளுக்கான ஒப்பந்தம் இன்னும் முடிவடையாததாலும் இந்த சாலையை அகலப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதால், இந்த திட்டம் கிடப்பில் இருக்கிறது.


இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையை சேர்ந்த அதிகாரிகள் கூறியதாவது:-


நீலாம்பூரில் இருந்து மதுக்கரை வரை 28 கி.மீ. தூரத்துக்கு ரூ.300 கோடியில் 4 வழிச்சாலையாக அமைக்கப்பட உள்ளது. இதில் நீலாம்பூர் அருகேயும், மதுக்கரை அருகேயும் தண்டவாளம் குறுக்கிடுவதால் அங்கு 2 இடங்களில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. நொய்யல் ஆற்றின் குறுக்கே ஒரு பெரிய பாலமும், 30-க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான நீரோடைகள் இருப்பதால் அங்கு சிறிய பாலமும், செட்டிபாளையம் பகுதியில் ஒரு மேம்பாலமும் அமைக்கப்படுகிறது.


சிக்கல் நீடிப்பு


கடந்த 1998-ம் ஆண்டு தனியார் நிறுவனம் சார்பில் இந்த சாலை அமைக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த சாலையில் செல்லும் வாகனங்களிடம் இருந்து சுங்க வரி வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாக இங்கு 6 இடங்களில் சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இந்த சுங்கச்சாவடிகளின் ஒப்பந்தம் 2031-ம் ஆண்டு வரை இருக்கிறது.எங்கள் ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரே நாங்கள் சுங்கச்சாவடியை அகற்றுவோம் என்று அந்த நிறுவனம் கூறி வருகிறது. இதனால் தற்போதைக்கு இந்த சாலையை அகலப்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது.


சிறப்பு குழு பேச்சுவார்த்தை


இது தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண மத்திய அரசு சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவை சேர்ந்தவர்கள் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்த சாலை அகலம் குறைவாக இருப்பதால் விபத்துகள் ஏற்பட்டு வருவதை மத்திய அரசிடம் எடுத்துக்கூறி உள்ளோம். எனவே இதற்காக அமைக்கப்பட்ட குழுவினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்த பேச்சுவார்த்தை காரணமாக இந்த ஆண்டு இறுதிக்குள் நல்ல தீர்வு கிடைத்து விடும். அதன் பின்னர் உடனடியாக பணிகள் தொடங்கப்பட்டு விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்படும்.


இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Next Story