இயக்குனரின் 'ஹார்டு டிஸ்கு'களில் 300 இளம்பெண்களின் ஆபாச படங்கள் - போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்


இயக்குனரின் ஹார்டு டிஸ்குகளில் 300 இளம்பெண்களின் ஆபாச படங்கள் - போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 3 Sep 2022 8:57 PM GMT (Updated: 2022-09-04T10:50:35+05:30)

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பெண்களை ஆபாச படம் எடுத்த வழக்கில் கைதான இயக்குனரிடம் கைப்பற்றப்பட்ட 'ஹார்டு டிஸ்கு'களில் 300 இளம்பெண்களின் ஆபாச படங்கள் இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சேலம்

சினிமா நிறுவனம்

சேலம் இரும்பாலை பகுதியை சேர்ந்தவர் கனகா (வயது 32). கணவரை பிரிந்து வாழும் இவர் சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா பகுதியில் இயங்கி வரும் சினிமா நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனகா சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார்.

அதில் தான் வேலை பார்க்கும் சினிமா நிறுவனத்தின் இயக்குனரான எடப்பாடி வீரப்பன்பாளையத்தை சேர்ந்த வேல்சத்திரியன் (38) மற்றும் அவரது பெண் உதவியாளர் ராஜபாளையத்தை சேர்ந்த ஜெயஜோதி(23) ஆகியோர் தனது செல்போனை பறித்து வைத்து கொண்டு மிரட்டுகின்றனர். மேலும் பல இளம்பெண்களை வைத்து ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி சீரழித்து வருகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

2 பேர் கைது

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அவர்கள் பல பெண்களிடம் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி ஆபாசமாக படம் எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து இயக்குனர் வேல்சத்திரியன் மற்றும் அவருடைய பெண் உதவியாளர் ஜெயஜோதி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

வேல்சத்திரியன் புதிதாக 'நோ' என்ற பெயரில் சினிமா எடுப்பதற்கு துணை நடிகை தேவை என்று சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தினார். இதனால் அவரை நம்பி ஏராளமான பெண்கள் சினிமா வாய்ப்பு தேடி வந்தனர். அப்போது அவர்களிடம் வேல்சத்திரியன் பெரிய நடிகை போல் ஆக்குகிறேன் என்று ஆசைவார்த்தை கூறி அவர்களை பல்வேறு கோணங்களில் ஆபாசமாக படம் எடுத்துள்ளார். அவர்களில் பலரை நிர்வாணப்படுத்தி வீடியோவும் எடுத்து மிரட்டி உள்ளார். இதில் சேலம், கோவை, திருப்பூர், கள்ளக்குறிச்சி என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இளம்பெண்கள் ஏமாந்துள்ளனர்.

இளம்பெண்களின் ஆபாச படங்கள்

கைதான வேல்சத்திரியனின் சினிமா நிறுவனத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்குகள், கணினிகள், மடிக்கணினி, பென்டிரைவ், கேமரா உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் பறிமுதல் செய்த ஹார்டு டிஸ்குகளில் 300-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் ஆபாச படங்கள் இருந்தன. இதனால் வேல்சத்திரியன் அந்த பெண்களை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ஏமாற்றி ஆபாசமாக படம் எடுத்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் பறிமுதல் செய்யப்பட்டவைகள் அனைத்தும் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் இருந்து சிலர் போன் மூலம் புகார் தெரிவித்து வருகின்றனர். அந்த பெண்களிடம் நேரடியாக வந்து எழுத்துப்பூர்வமாக புகார் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

பிரபல நடிகர்களுடன் புகைப்படங்கள்

இதற்கிடையில் வேல்சத்திரியன் சேலத்தில் சினிமா நிறுவனம் தொடங்குவதற்கு முன்பாக நாமக்கல், எடப்பாடி, ஆத்தூர் ஆகிய இடங்களில் சினிமா நிறுவனம் வைத்து அங்கு ஸ்டூடியோ அமைத்து இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதுதொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறோம்.

மேலும் கைதான வேல்சத்திரியன், பிரபல நடிகர்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்களையும் கைப்பற்றி உள்ளோம். இது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story