3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட விஜய நகர காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு


3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட விஜய நகர காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு
x

திருப்பத்தூர் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட விஜயநகர காலத்து கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட விஜயநகர காலத்து கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

கல்வெட்டு கண்டெடுப்பு

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர் ஆ.பிரபு, தொல்லியல் ஆய்வாளரும் வரலாற்றுத்துறைப் பேராசிரியருமான சேகர், ஆய்வு மாணவர் பா.தரணிதரன் மற்றும் உதவிப்பேராசிரியர் சுனில், சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகிலுள்ள சுடுகாட்டூர் என்ற இடத்தில் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலத் தடயங்களைக் கண்டறிந்தனர்.

இது குறித்து ஆ.பிரபு கூறியதாவது:-

திருப்பத்தூரில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள சுடுகாட்டூர் மாரியம்மன் கோவில் எதிரே உள்ள மங்கை பெருமாள் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலத் தடயங்களைக் கண்டறிந்தோம். நிலத்தில் உழவுப்பணி மேற்கொண்ட போது பல மண் ஓடுகளும், மண்ணால் செய்யப்பட்ட பொருட்களும் உடைந்த நிலையில் வெளிப்பட்டன. அவற்றைச் சேகரித்து ஆய்வு செய்தபோது அவை, கருப்பு, சிவப்பு மண்பாண்ட ஓடுகள் என்பதை அறிய முடிந்தது. பெருக்கற்காலத்தோடு தொடர்புடைய ஈமப்பேழையின் ஊன்று கால் ஒன்றும் கிடைத்திருப்பது சிறப்புக்குரியதாகும்.

பலகைக்கல்

ஈமப்பேழைகள் என்பவை பெருங்கற்காலத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்திட பயன்படுத்தப்பட்டவையாகும். இவை செவ்வக வடிவில் குளியல்தொட்டி போன்று காணப்படும். இவ்வூர் சுடுகாட்டூர் என்று அழைக்கப்படுகிறது ஏனென்றால் இது போன்ற ஈமச்சின்னங்கள் மக்கள் வாழ்விடங்களுக்கு அருகாமையில் தான் பெரும்பாலும் கண்டறியப்பட்டுள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தின் பல இடங்களில் இவை போன்ற பழங்கால மக்களின் வாழ்வியல் தடயங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருவது மாவட்டத்தின் வரலாற்றுப் பின்புலத்தினை பறைசாற்றுவதாக உள்ளது.

தமிழ்த்துறை பேராசிரியர் க.மோகன் காந்தி, காணிநிலம் மு. முனிசாமி ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் அண்ணான்டப்பட்டி கிராமத்தில் 3 அடி உயரம் கொண்ட பலகைக் கல்லில் முன்பக்கம் 22 வரிகளும், பின்பக்கம் 13 வரிகளும் எழுதப்பட்டுள்ளன. தமிழகத்தைக் கி.பி. 16-ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த விஜய நகர கால மன்னன் வேங்கடபதிராயரின் ஆட்சிக் காலத்தில் இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது.

அண்ணான்டப்பட்டியில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாட இக்கோவிலுக்கு நஞ்சை, புஞ்சை நிலங்கள் தானம் தரப்பட்ட செய்தியை இக்கல்வெட்டு எடுத்துரைக்கிறது என மோகன்காந்தி தெரிவித்தார்.


Next Story