302 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை
302 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை
பொள்ளாச்சி
பொள்ளாச்சி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பொள்ளாச்சி, தெற்கு, வடக்கு ஒன்றிய பகுதியை கட்டுமான தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், தினக்கூலி பணியாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. இதற்கு வடக்கு வருவாய் ஆய்வாளர் முருகன், தெற்கு வருவாய் ஆய்வாளர் பிரேமா தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு அமைப்பு சாரா தொழிலாளர்களில் சுமார் 302 பேருக்கு நல வாரிய அடையாள அட்டை வழங்க ஆன்லைனில் பதிவு செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதுகுறித்து வருவாய்துறையினர் கூறியதாவது:- இந்த பதிவின் மூலம் தேசிய அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட நிரந்தர பதிவு எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும். விபத்து காப்பீடு பி.எம்.எஸ்.பி.ஒய். என்ற இத்திட்டத்தின் கீழ் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். விபத்து மரணம், முழு உடல் ஊனம் ஆகியவற்றுக்கு ரூ.2 லட்சம், பகுதியளவு ஊனத்திற்கு ரூ.1 லட்சம் கிடைக்கும். சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழான பயன்கள் நேரடியாக அவர்களுக்கு வழங்கப்படும். 18 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆதார் எண், செல்போன் எண், வங்கி புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் பதிவு செய்துகொள்ளலாம் என்றனர்.