31 ஏரிகளில் 25 சதவீதத்துக்கும் குறைவாகவே தண்ணீர் உள்ளது-அதிகாரிகள் தகவல்
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் 31 ஏரிகளில் 25 சதவீதத்துக்கும் குறைவாகவே தண்ணீர் உள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏரிகளில் தண்ணீர்
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக வேலூரில் சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கமும், இரவில் பலத்த மழையாகவும் பெய்து வருகிறது. மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் 101 ஏரிகள் உள்ளன. இதில் இதுவரை எந்த ஏரியும் முழுகொள்ளவை எட்டவில்லை. 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை 3 ஏரிகளில் தண்ணீர் உள்ளது. 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை 16 ஏரிகளிலும், 25 சதவீதம் 51 ஏரிகளிலும், 25 சதவீதத்துக்கும் குறைவாக 31 ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்டத்தின் முக்கிய நீர்ஆதாரமான பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிளை ஆறுகளிலும் தண்ணீர் வரத்து உள்ளதால் பாலாற்றில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீரை திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மழை அளவு
வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை பெய்த மழையின் அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-
மோர்தானா 8, குடியாத்தம் 12, பேரணாம்பட்டு 14.20, மேலாலத்தூர் 16.60, பொன்னை 18.40, ஒடுகத்தூர் 20, வேலப்பாடி 20.30, வேலூர் 32.30, காட்பாடி 35.50, விரிஞ்சிபுரம் 36.20, அம்முண்டி 37.60, ராஜாதோப்பு அணை 39.