ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 32 பேர் காயம்


ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 32 பேர் காயம்
x

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 32 பேர் காயமடைந்தனர்.

திருச்சி

துவரங்குறிச்சி:

ஜல்லிக்கட்டு

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த பழையபாளையத்தில் உள்ள பட்டத்தளச்சி அம்மன் மற்றும் வரதராஜபெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. கோவில் அருகே உள்ள பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாடுபிடிவீரர்கள், சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்றனர். அடக்க வந்த வீரர்களை, காளைகள் ஆக்ரோஷம் காட்டி நெருங்க விடாமல் விரட்டின. இதனால் ஜல்லிக்கட்டு களைகட்டியதை பார்த்த பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர். ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

தடுப்பு சாய்ந்தது

இந்த ஜல்லிக்கட்டில் 719 காளைகளும், 300 வீரர்களும் களம் கண்டனர். காளைகள் முட்டியதில் வீரர்கள் உள்பட 32 பேர் காயமடைந்தனர். முறையான தடுப்புகள் இல்லாததால் சற்று தாமதமாகவே ஜல்லிக்கட்டு தொடங்கியது. பின்னர் ஜல்லிக்கட்டு நடந்த நிலையில் வாடிவாசலின் இருந்து வலது புறத்தில் அமைக்கப்பட்டிருந்த நீளமான தடுப்புகள் சாயத்தொடங்கியது. இதையடுத்து அந்த ஊரை சேர்ந்தவர்கள், தடுப்புகள் சாயாத வகையில் தாங்கிப்பிடித்து, கயிற்றால் இழுத்து கட்டினர். இது போன்று தடுப்புகள் சாய்வதும், அதனை சரிசெய்வதுமாக அடிக்கடி நடந்ததால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடந்தது.

வழக்கமாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தடுப்புகள் பலமாக உள்ளதா? என்பதை சோதனை செய்த பின்னரே ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்படும். அவ்வாறு அனுமதி வழங்கப்பட்ட நேற்று ஜல்லிக்கட்டு நடந்த நிலையில், தடுப்புகள் சாய்ந்ததும், அதை சரி செய்யாமலேயே ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடந்ததும் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story