3,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; வாலிபர் கைது
திருவாரூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3,200 கிலோ ரேஷன் அரிசியை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வாலிபரை கைது செய்தனர்.
திருவாரூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3,200 கிலோ ரேஷன் அரிசியை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வாலிபரை கைது செய்தனர்.
ரகசிய தகவல்
தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்துபவர்களை பிடிப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும் ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருவாரூர் அருகே திருநெல்லிக்காவல் கீழதொரக்குடி கிராமத்தை சேர்ந்த ராஜகுரு(வயது 32) என்பவர், அவரது வீட்டில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
3,200 கிலோ ரேஷன் அாிசி
அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தென்னரசு, விஜய் ஆகியோர் தலைமையில் ஏட்டு செந்தில் மற்றும் போலீசார், ராஜகுரு வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது 3,200 கிலோ ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில், ரேஷன் கடையில் அரிசி வாங்கி பயன்படுத்தாதவர்கள் வீட்டிற்கு சென்று அவர்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி மொத்தமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு தீவனத்திற்காகவும், கேரள மாநிலத்திற்கும் அனுப்பி வந்தது தெரிய வந்தது.
வாலிபர் கைது
இதனையடுத்து பதுக்கி வைத்திருந்த 3,200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜகுருவை கைது செய்தனர்.