3,200 மாணவிகள் ஒன்று கூடி தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடி சாதனை


3,200 மாணவிகள் ஒன்று கூடி தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடி சாதனை
x

நாகர்கோவிலில் நடந்த சுதந்திர தின அமுத பெருவிழாவில், ஒரே நேரத்தில் 3,200 மாணவிகள் ஒன்று கூடி தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடி சாதனை படைத்துள்ளதாக கலெக்டர் அரவிந்த் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகா்கோவில்:

நாகர்கோவிலில் நடந்த சுதந்திர தின அமுத பெருவிழாவில், ஒரே நேரத்தில் 3,200 மாணவிகள் ஒன்று கூடி தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடி சாதனை படைத்துள்ளதாக கலெக்டர் அரவிந்த் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின அமுத பெருவிழா

குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் 75-வது ஆண்டு சுதந்திர தின அமுத பெருவிழா நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சி வருகிற 15-ந் தேதி வரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது.நாகர்கோவிலில் உள்ள புனித ஜோசப் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

விழாவில் 3,200 மாணவிகள் பள்ளி வளாகத்தில் ஒன்றுகூடி தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடினர். இதனையடுத்து கலெக்டர் அரவிந்த் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவிகள் தேசியக்கொடியின் மூவர்ண நிறத்திலான பலூன்களை பறக்க விட்டனர்.

3,200 மாணவிகள்...

நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் மாணவிகள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

விழாவில் 3,200 மாணவிகள் ஒருசேர தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதத்தை பாடியபோது அனைவரிடத்தில் தேச பக்தியும், தமிழ் பற்றினையும் பார்க்க முடிந்தது. இது சாதனையாகும்.

மாணவர்கள் என்றும் போதை பழக்கத்திற்கு அடிமை ஆகி விடக்கூடாது. செல்போன்களை தவறான வழிகளில் பயன்படுத்தக்கூடாது. உடற்பயற்சி, யோகா மற்றும் விளையாட்டுகளில் மாணவா்கள் நேரத்தை செலவிட வேண்டும். கல்வி ஒன்றே நமது வாழ்க்கை தரத்தை உயர்த்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து நாகர்கோவில் கோட்டார் கவிமணி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அமுத பெருவிழா நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டு மூவர்ண வண்ண பலூன்களை பறக்கவிட்டார். அவருடன் சேர்ந்து ஆசிரியர்கள், மாணவர்களும் பலூன்களை பறக்கவிட்டனர். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் தேசிய தலைவர்களின் வேடம் அணிந்து வந்தனர்.

அதிகாரிகள்

நிகழ்ச்சிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி புகழேந்தி, கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், பள்ளி தலைமை ஆசிரியர்கள் சாந்தி சகாய மேரி ஜெயந்தி (புனித ஜோசப் பள்ளி), நல்ல பாக்கியலெட் (கவிமணி அரசு பள்ளி), முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் சுரேஷ் பாபு, ஹேமா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story