சென்னை விமான நிலையத்தில் 33 விமானங்கள் ரத்து
‘மாண்டஸ்’ புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதால் சென்னை விமான நிலையத்தில் 33 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
மீனம்பாக்கம்,
'மாண்டஸ்' புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 27 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்த விமானங்கள் அனைத்தும் 72 சீட்டுகள் கொண்ட சிறிய ரக விமானங்கள்(ஏ.டி.ஆர்.) ஆகும்.
இந்த சிறிய ரக விமானங்கள் பறக்கும்போது 50 கி.மீ. வேகத்தில் காற்று வந்தால் சமாளிக்க கூடியது. ஆனால் புயல் காற்று 60 கி.மீ. வேகத்தில் இருந்து 75 கி.மீ. வேகத்தில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. புயல் காற்று வேகமாக அடித்தால் சிறிய ரக விமானத்துக்கு பெரும் ஆபத்து ஏற்படும்.
புயல் தாக்கம் ஓயும் வரை...
எனவே 'மாண்டஸ்' புயல் கரையை கடக்கும் வரையில் ஏ.டி.ஆர். ரக விமானங்களின் சேவைகளை நிறுத்தி வைக்கும்படி சென்னை விமான நிலையத்துக்கு விமான போக்குவரத்து பாதுகாப்பு துறை தகவல் கொடுத்தது. இதையடுத்து ஒட்டுமொத்தமாக ஏ.டி.ஆர். ரக விமானங்களை புயல் தாக்கம் ஓயும் வரையில் நிறுத்தி வைத்திருக்கின்றனர்.
சென்னையில் இருந்து இயக்கப்படும் ஏ.டி.ஆர். சிறிய ரக விமானங்கள் தூத்துக்குடி, மைசூர், கோழிக்கோடு, விஜயவாடா, பெங்களூரு, திருச்சி, மதுரை, ஐதராபாத், ஹூப்ளி, கண்ணூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமானங்கள் ஆகும். இந்த அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வெளிநாட்டு விமானங்கள்
இதேேபால் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நள்ளிரவு 12.50 மணிக்கு கொழும்பு சென்றுவிட்டு, அதிகாலை 4.20 மணிக்கு சென்னை திரும்பும் விமானமும், அபுதாபியில் இருந்து இரவு 7.50 மணிக்கு சென்னை வந்து, மீண்டும் இங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் விமானமும், மாலை 6 மணிக்கு சென்னை வந்து விட்டு காலை 7 மணிக்கு ரீயூனியன் செண்ட் டென்னிஸ் புறப்பட்டு செல்ல வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
6 வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது குறித்து பயணிகளுக்கு உரிய தகவல்கள் தரப்பட்டு உள்ளதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.