33 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் செப்டம்பர் மாதத்தில் சட்ட முறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டல பொருட்கள் விதிகளின் கீழ் 33 வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் செப்டம்பர் மாதத்தில் சட்ட முறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டல பொருட்கள் விதிகளின் கீழ் 33 வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) நா.முருகப்பிரசன்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
அதிகாரிகள் ஆய்வு
நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) நா.முருகப்பிரசன்னா தலைமையில் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் முத்திரை ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் திடீர் ஆய்வு நடத்தினார்கள்.
நெல், தேயிலை உள்ளிட்ட விவசாய விளை பொருட்கள் கொள்முதல் நிலையங்கள், குடோன்கள், முக்கிய சாலைகள், நடைபாதைகள், தள்ளுவண்டிகள், காய்கறி, மீன் மற்றும் இறைச்சி விற்பனை செய்யும் இடங்கள் மற்றும் சந்தைகளில் உள்ள 63 கடைகள், நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
33 நிறுவனங்கள்
அப்போது எடை அளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து மறு முத்திரையிடாமல் வியாபார உபயோகத்தில் வைத்திருந்த 2 நிறுவனங்கள், சோதனை எடை கற்கள் வைத்திருக்காத 14 நிறுவனங்கள் மற்றும் மறுபரிசீலனை சான்று வெளிக்காட்டி வைக்காத 8 நிறுவனங்கள் மீது எடைஅளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுதவிர 51 கடைகள் மற்றும் நிறுவனங்களில் பொட்டல பொருட்கள் விதியின் கீழ் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பொட்டல பொருட்களின் தயாரிப்பாளரின் பெயர், முகவரி, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, நிகர எடை மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை போன்ற உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்த 4 நிறுவனங்கள் மற்றும் பொட்டலமிடுபவர் அல்லது இறக்குமதியாளர் பதிவு சான்று பெறாமல் விற்பனை செய்த 5 கடை நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் எடை அளவுகளை தொழிலாளர் நலத்துறை முத்திரை ஆய்வாளரிடம் முத்திரையிட்டு பறிமுதல் மற்றும் வழக்கு நடவடிக்கையை தவிர்க்குமாறு வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.