ரூ.330 கோடியில் நலத்திட்ட உதவிகள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்


ரூ.330 கோடியில் நலத்திட்ட உதவிகள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்
x

நெல்லையில் இன்று நடக்கும் பிரமாண்டமான விழாவில் ரூ.330 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

திருநெல்வேலி

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று பல்வேறு பணிகளை ெதாடங்கி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதன்படி நெல்லையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் பிரமாண்டமான அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் நாகர்கோவிலில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றுவிட்டு, மாலையில் நெல்லை திரும்பினார். முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெல்லை மாவட்ட எல்லைகளிலும் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அவர், முடிவுற்ற பல்வேறு பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

நெல்லை மாநகராட்சி சார்பில் இதுவரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிவடைந்துள்ள 5 பணிகளை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதாவது, பாளையங்கோட்டையில் ரூ.3.06 கோடியில் பழமை மாறாமல் கட்டப்பட்டுள்ள மேடை போலீஸ் நிலையம், ரூ.9.88 கோடியில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு அரங்கம், ரூ.15.12 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ள வ.உ.சி. மைதானம், ராமையன்பட்டியில் 2 மெகாவாட்டில் முடிக்கப்பட்டுள்ள 2 சோலார் பேனல் மையங்களை தொடங்கி வைக்கிறார்.

மேலும், மாநகராட்சி பகுதியில் மொத்தம் சுமார் ரூ.54.82 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டப்பணிகளும் தொடங்கி வைக்கப்படுகிறது. அதன்படி நெல்லை மாநகராட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, சட்டக்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறைகளில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், முன்னோடி வங்கி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களின் குழந்தைகள் கல்வி உதவி பெறுதல், வேளாண் பொறியியல் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, பள்ளிக்கல்வித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சமூக பாதுகாப்புத்துறை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம், தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை (சமூக பாதுகாப்பு திட்டம்), முன்னாள் படைவீரர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, உணவு பொருள் வழங்கல் துறை, வனத்துறை ஆகியவை சார்பில் 30 ஆயிரத்து 658 பயனாளிகளுக்கு ரூ.330 கோடியில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

மேலும், பாபநாசம் காரையாறு மலைப்பகுதியில் உள்ள காணி இன மக்கள் அந்த பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்கள். அவர்கள் தங்கி இருக்கும் பகுதி மற்றும் விவசாய நிலங்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று 78 பேருக்கு தனி உரிமை பட்டாவை நெல்லையில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

விழா நடைபெற உள்ள நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்தில் முன்னேற்பாடு பணிகள், பந்தல், மேடை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு போலீஸ் கட்டுப்பாட்டில் விழா மேடை வந்து உள்ளது. விழா மேடையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.ஆஸ்ரா கார்க் தலைமையில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார், டி.ஐ.ஜி.பிரவேஷ்குமார் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி நெல்லை மாநகரம் முழுவதும் அவரை வரவேற்று தி.மு.க.வினர் சுவர் விளம்பரம் மற்றும் கட்சி கொடிகளை பறக்கவிட்டு உள்ளனர். இதேபோல் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது.Next Story