கரூரில் 33, 598 பேருக்கு கொரோனா தடுப்பூசி


கரூரில்  33, 598 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x

கரூரில் நடந்த மெகா முகாமில் 33, 598 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கரூர்

கொரோனா தடுப்பூசி முகாம்

கரூர் மாவட்டத்தில் நேற்று 32-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 1,677 மையங்களில் நடைபெற்றது. இந்த முகாமானது காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. கரூர் குமரன் நடுநிலைப்பள்ளி மற்றும் புகழூர் காகித ஆலை பணியாளர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை கலெக்டர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இலவசமாக போட்டு கொள்ளலாம்

75-வது சுதந்திர தினத்தையொட்டி 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கடந்த 15-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை 75 நாட்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போட்டுக் கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.கரூர் மாவட்டத்தில் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் 43,447 பேரும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் 5,68,757 பேரும் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.இதில் துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) சந்தோஷ்குமார், மாநகராட்சி சுகாதரா அலுவலர் லட்சியவர்ணா மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நொய்யல்

நொய்யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி, குறுக்குச்சாலை அண்ணாநகர் அரசு ஆரம்பப்பள்ளி, குளத்துப்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி, வேட்டமங்கலம் அரசு ஆரம்பப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை 7.30 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் அனிதா தலைமையில் மருத்துவக்குழுவினர் முகாமில் கலந்து கொண்டு 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டனர். அதேபோல் சுகாதாரத்துறை மருத்துவர்கள், செவிலியர்கள்கொண்ட குழுவினர் முகாமில் கலந்து கொள்ள முடியாமல் வீடுகளில் இருந்தவர்களுக்கு வீடுகளுக்கு நேரடியாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

தடுப்பூசி விவரம்

இந்த முகாமில் முதல் தவணை தடுப்பூசியை 153 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 12,718 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 20,727 பேரும் என மொத்தம் 33,598 பேர் செலுத்தி கொண்டனர். கரூர் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 8,27,543 பேர். இது 96.95 சதவீதம் ஆகும். 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 8,12,088 பேர். இது 95.14 சதவீதம் ஆகும்.


Next Story