சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 34 பேர் காயம்


சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 34 பேர் காயம்
x

திருச்சி அருகே ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 34 பேர் காயம் அடைந்தனர்.

திருச்சி

திருச்சி அருகே ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 34 பேர் காயம் அடைந்தனர்.

ஜல்லிக்கட்டு

திருச்சியை அடுத்த மணிகண்டம் ஒன்றியம், அளுந்தூர் ஊராட்சி பள்ளப்பட்டியில் தானாய் முளைத்த முத்துமாரியம்மன், காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்பதற்காக 700 காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. மருத்துவ பரிசோதனையில் 627 காளைகள் மட்டுமே தகுதிபெற்றன. அந்த காளைகளுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டன. இதில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மணப்பாறை, குளித்தலை, கரூர், விராலிமலை, ஆவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் பங்கேற்றன.

175 பேருக்கு மட்டுமே அனுமதி

இதேபோல் 300 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க பதிவு செய்திருந்தனர். ஆனால் தகுதி வாய்ந்த 175 பேர் மட்டுமே ஜல்லிக்கட்டில் மாடுகளை பிடிக்க அனுமதிக்கப்பட்டனர்.

காலை 8.15 மணி அளவில் வீரர்கள் உறுதிமொழி ஏற்றதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் குணசேகரன் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து வாடிவாசலுக்கு பின்புறம் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

வீரர்களை பந்தாடிய காளைகள்

அப்போது வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். பல காளைகள் வீரர்களிடம் சிக்காமல் சீறிப்பாய்ந்து சென்றன. சில காளைகள் களத்தில் நின்று சுழன்று சுழன்று முடிந்தால் பிடித்துப்பார் என்று மிரட்டியது. சில காளைகள் மாடுபிடி வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. அப்போது அங்கு இருந்த ஜல்லிக்கட்டு பார்வையாளர்கள், ரசிகர்கள் கைத்தட்டியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர்.

34 பேர் காயம்

இந்த ஜல்லிக்கட்டு மாலை 3 மணி வரை நடைபெற்றது. இதில் காளைகள் முட்டியதில் வீரர்கள், பார்வையாளர்கள், மாட்டின் உரிமையாளர்கள் உட்பட 34 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு திடல் அருகே தயாராக இருந்த மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயம் அடைந்த மாடுபிடி வீரர் மணப்பாறை ஆண்டவர் கோவில் ஜோதி மகன் விக்னேஷ் (வயது 27), பார்வையாளர்கள் திருச்சி தில்லைநகர் முத்து மகன் வீரமணி (19), மணிகண்டம் அருகே உள்ள கொழுக்கட்டகுடி அருணகிரி (35), பள்ளப்பட்டி சக்திவேல் (48), மாட்டின் உரிமையாளர் செங்குறிச்சி ராஜா (48) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரிசு

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் குக்கர், மிக்ஸி, மின்விசிறி, சில்வர் அண்டா, டைனிங் டேபிள், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பரிசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை திருச்சி, விராலிமலை, மணிகண்டம், மணப்பாறை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமானோர் வாகனங்கள், தடுப்பு கட்டைகள், ஆகியவற்றில் அமர்ந்து கண்டுகளித்தனர். பாதுகாப்பு பணியில் திருச்சி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆசைத்தம்பி மேற்பார்வையில் திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை பேராசிரியர் சண்முகம், முன்னாள் ஊர் தலைவர் பழனிச்சாமி, சக்தி கோவைஸ் சக்தி உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.

ஜல்லிக்கட்டில் மணப்பாறை, தோகைமலை, திருச்சி ஆகிய ஊர்களில் இருந்து வந்த 3 பெண்கள் தங்களது ஜல்லிக்கட்டு காளையை அவிழ்த்து விட்டனர். அப்போது அவர்களது காளை வீரர்களிடம் பிடிபடாமல் சென்றதைப் பார்த்து அப்பெண்கள் துண்டை வீசி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


Next Story