காஞ்சீபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் 34 ஆயிரத்து 459 பேர் பயன் பெறுகின்றனர் - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் 34 ஆயிரத்து 459 பேர் பயன் பெறுகின்றனர் என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறும் விவசாயிகள் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் கொள்முதல் செய்ய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் மூன்று தவணைகளாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.தற்போது மத்திய அரசு இந்த திட்டத்திற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆதார் எண் அடிப்படையாக வைத்து அடுத்த தவணை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு விவசாயிகள் இணையதளம் மூலம் இ-கேஒய்சி சரி செய்த பின்னர் அடுத்த தவணை தொகை விடுவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 34 ஆயிரத்து 459 தகுதிவாய்ந்த பயனாளிகள் பதிவு செய்து இந்த திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் பெயர், ஆதார் விபரங்களை, மத்திய அரசின் பி. எம். கிசான் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பின் மொபைல் போனில் வரும் ஓ.டி.பி. எண்ணை பயன்படுத்தி தங்கள் விபரங்களை நேரடியாக பதிவு செய்யலாம். பொது சேவை மையங்களுக்கு சென்று, கைரேகை வைத்து, பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்து புதுப்பிக்கலாம். இதில் ஏதேனும் ஒரு வழிமுறைகளில் புதுப்பித்தால் மட்டும், அடுத்த தவணை உதவித்தொகை கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆகவே இந்த திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் அனைவரும் ஆதார் எண்ணை பி.எம். கிசான் திட்டத்தில் இணைக்கவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.