3 நாளில் 347 மனுக்கள் பெறப்பட்டன
கோத்தகிரியில் நடந்த ஜமாபந்தியில் 3 நாளில் 347 மனுக்கள் பெறப்பட்டன.
கோத்தகிரி
கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 21-ந் தேதி ஜமாபந்தி தொடங்கியது. இந்த முகாமிற்கு ஜமாபந்தி அலுவலரும், மாவட்ட டாஸ்மாக் மேலாளருமான கண்ணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் முதல் நாளில் கீழ் கோத்தகிரி பகுதி மக்களிடம் இருந்து 30 மனுக்களும், நேற்று முன்தினம் நெடுகுளா பகுதியில் இருந்து 145 மனுக்களும், நேற்று கோத்தகிரி வட்டத்துக்கு உட்பட்ட பகுதி மக்களிடம் இருந்து 172 மனுக்கள் என கடந்த 3 நாட்களில் மொத்தம் 347 மனுக்கள் பெறப்பட்டன.
முகாமில் 4 பேருக்கு ரேஷன் அட்டை, 10 பேருக்கு பட்டா மாறுதல், ஒருவருக்கு இறப்பு சான்றிதழ் என மொத்தம் 15 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் கடந்த 1989-ம் ஆண்டு இறந்த ஒருவரின் இறப்பு சான்றிதழ் கேட்டு 34 ஆண்டுகளுக்கு பின் விண்ணப்பித்த ஒருவரது மனு ஆய்வு செய்யப்பட்டு, உடனே சான்றிதழ் வழங்கப்பட்டது. பிற மனுக்கள் மீது நடவடிக்கைக்காக சம்பந்தபட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் நீலகிரி மாவட்ட தலைமை பொறுப்பாளர் (ஆயம்) சிவக்குமார், கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, தாசில்தார்கள் ஆர்.மகேஸ்வரி (சமூக நலத்திட்டம்), மகேஸ்வரி (பழங்குடியினர்), துணை தாசில்தார் சதிஷ் நாயக், நந்தகுமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.