திருச்சி ரெயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேர் கைது


திருச்சி ரெயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட  35 பேர் கைது
x

திருச்சி ரெயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேர் கைது செய்யப்பட்டனர்

திருச்சி

திருச்சி, ஜூன்.18-

மத்திய அரசு கொண்டு வந்துள்ள `அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருச்சி ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து வாலிபர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், தஞ்சை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 35 வாலிபர்கள் கலந்து கொண்டனர். இது பற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை கலைந்து போக கூறினர். ஆனால் அவர்கள் மறுப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் அஜய்தங்கம் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். தொடர்ந்து, அவர்கள் இரவில் விடுவிக்கப்பட்டனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், நாங்கள் இந்திய ராணுவத்தில் சேர விண்ணப்பித்திருந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள `அக்னிபத்' திட்டம் ஏமாற்றம் அளித்துள்ளது. அதில் 18 வயது முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து 4 ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற முடியும். அதன் பின்னர் ஓய்வூதியம், பணிக்கொடை ஆகி­யவை வழங்கப்படமாட்டாது. ஆனால் இதில் பணியாற்றியவர்கள் துணை ராணுவ படையில் சேர முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதில் பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்­களில் வன்முறையும் வெடித்துள்ளது.மத்திய அரசு உடனே இந்த திட்டத்தை திரும்ப பெறாவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

----


Related Tags :
Next Story