ரூ.35 லட்சம் செலவில் செல்லப்பிராணிகளை எரியூட்டும் தகன மையம்-கலெக்டர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார்


ரூ.35 லட்சம் செலவில் செல்லப்பிராணிகளை எரியூட்டும் தகன மையம்-கலெக்டர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 Jun 2023 12:30 AM IST (Updated: 14 Jun 2023 11:34 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் செல்லப்பிராணிகளை எரியூட்டும் மையத்தை கலெக்டர் கிராந்திகுமார் தொடங்கிவைத்தார்.

கோயம்புத்தூர்

கோவை: கோவையில் செல்லப்பிராணிகளை எரியூட்டும் மையத்தை கலெக்டர் கிராந்திகுமார் தொடங்கிவைத்தார்.

எரியூட்டும் மையம்

கோவையில் முதல்முறையாக நாய் மற்றும் செல்லப்பிராணிகள் இறந்தால் அதனை பாதுகாப்பான முறையில் எரியூட்ட, தகன மையம் சீரநாயக்கன்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து ரூ.35 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை நேற்று கலெக்டர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் கலெக்டர் கிராந்திகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தினமும் 6 நாய்கள்

நமக்கு நாமே திட்டத்தில் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகள் இறந்தால் எரியூட்டும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டு நாய்கள் இறந்தால் அதனை எரியூட்ட கட்டணம் வசூலிக்கப்படும். தெருநாய்கள் இலவசமான முறையில் எரியூட்டப்படும். ஒருநாளைக்கு 6 நாய்கள் எரியூட்ட வசதி செய்யப்பட்டுள்ளது. கியாஸ் முறையில் இது இயங்கும். எரியூட்டும்போது சுற்றுப்புற சுகாதாரத்துக்கு கேடு ஏற்படாமலும், அதன் கழிவுகள் வெளியேறாமலும் தடுக்க உரிய சுகாதார முறைகள் கையாளப்படும். கோவை நகரில் 1 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. நகரில் தெருநாய்கள் இறந்தால் அவற்றை அப்புறப்படுத்த போதிய இடவசதி இல்லை. ஆகவே இந்த மையத்தில் எரியூட்ட வசதி செய்து கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, கால்நடைத்துறை அதிகாரி பெருமாள்சாமி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் ராஜ்மோகன் நாயர், மயில்சாமி, சுமித்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story